Saturday, November 28, 2015

வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் - விமர்சனம்

வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் - சாரு நிவேதிதா





புதிய தலைமுறை வார இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு, தற்போது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.


***


புதிய தலைமுறையில் தொடராக வந்தபோது, பெரும்பாலானோர் இதைப் படிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. ஆனால், நிறைய அரசுப்பள்ளிகளில் புதிய தலைமுறை வாங்குகிறார்கள் என்பதையும், ஆசிரியர்கள் இத்தொடரை விரும்பிப் படித்தார்கள் என்பதையும் அறிவேன்.


வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் கட்டுரைகளை ஒருசேரப் படித்தபோது பத்தி இலக்கியத்தில் இது ஒரு பாய்ச்சல் எனப் புரிந்தது.  


குழந்தை வளர்ப்பு, சினிமா, இலக்கியத் திறனாய்வு, அகிம்சை, பயணம், உணவு, அறம், சங்க இலக்கியம், இசை, தனிமனித சுதந்திரம் எனப் பல்வேறு தலைப்புகளில், சுவையாக, போதனை நடை இல்லாமல், அலுக்காமல், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.


சல்மான் கான், காந்தி பற்றிய இடம் நிறைய யோசிக்க வைத்தது. க்ளாரா - இனியா சம்பவம் நம் இந்திய வாழ்வின் பிரதிபலிப்பு. ராமபத்திரன் கதை, ஒய்வு பெற்றவர்கள் அஞ்சல் அலுவகத்தில் படும் துன்பங்கள், அஞ்சல் நிலைய அதிகாரி - ஓட்டுனர் போன்ற நிறைய இடங்கள் நாவல் போலவே இருந்தன; அபுனைவு என்றே தோன்றவில்லை.


முத்துசாமி ஐயர் - பாட்டி நிகழ்வு எல்லாம் அறத்தின் சாட்சிகள். இந்த புத்தகம் படித்த பிறகுதான் 'திருடன் மணியன் பிள்ளை'யைப் படித்தேன்; 'மண்ணில் தெரியுது வானம்' வாங்கினேன்.

அறம், சத்தியம், நேர்மை போன்றவைகளை ஒருவர் பேசினாலும் எழுதினாலும் அலுப்பு ஏற்படும். ஆனால், இவ்விசயங்களை சுவாரசியமாக, ஏற்கும்படியாக, மனமாற்றம் அடையச் செய்வதாக இருந்தது இந்தத் தொகுப்பில்.

(ஜூலை 13, 2015 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.)

***