Saturday, November 28, 2015

இல்லாதவர்களின் நிழல்கள் - விமர்சனம்

இல்லாதவர்களின் நிழல்கள் - சாரு நிவேதிதா
(சாரு நிவேதிதா சிறுகதை, உயிர்மை ஃபெப்ருவரி, 2014)




'Diabolically Yours' என்ற தலைப்பில் 'Exotic Gothic 5, Volume II' என்ற புத்தகத்தில் ஆங்கிலத்தில் முதலில் இக்கதை வெளியானது.



***



கதை. கதைக்குள் ஒரு கதை. அதனுள் சில கனவுகள். நூற்றாண்டுகளின் ஊடே, பல பிறப்புகளின்  ஊடே பயணிக்கும் கதாப்பாத்திரங்கள். குழப்பமில்லாத, சுவாரசியமான, திகிலூட்டும் நடை.


ஒரு சிறந்த பேய்க்கதை. படிக்கும் போது, அடுத்து என்ன நடக்குமோ எனும் பரபரப்பு.


தைரியம் என்பதன் அர்த்தம் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாதது. கதையப் படிக்கும் பொழுது, தைரியத்துடனே படித்தேன்!


இருண்மையின் முடிவில் பெருவொளி தெரிகின்றது. தொண்ணூற்றி ஒன்றாவது பெண்ணால் எப்படி மந்திரவாதியைக் கொல்ல முடிந்தது என்று அறியும் பொழுது, கடவுளின் வல்லமை புலனாகிறது.


அதீதச் செல்லம் ஒரு குழந்தையை எப்படிக் கெடுக்கிறது என்பதையும், குழந்தையைக் கவனிக்காமல் வெற்று
ஆன்மீகத்தை நாடினால் என்ன ஆகும் என்பதையும் சாரு அருமையாகக் கூறுகிறார்.


ஒன்றின் மேல் வெறுப்படைந்து (உ-ம்: காதல் தோல்வி, குடும்பத்தின் மீது ஏற்படும் வெறுப்பு ), அதனால் ஏற்படும் சூன்யத்தை நிரப்ப, மற்றொன்றின் மேல் ஈர்க்கப்பட்டுச் செய்யும் எந்தச் செயலுமே(உ-ம்: மற்றொரு காதல், துறவறம்) மகிழ்ச்சியைத் தராது என் சாரு அழாகாக விளக்குகிறார்.


இறந்த தாயை மறக்க முடியாத குழந்தை, குழந்தையின் ஆவியை நிராகரிக்க முடியாத சுபா, தொண்ணூற்றி ஒன்றாவது பெண்ணின் மேல் நூறு ஆண்டுகள் ஆகியும் வன்மம் குறையாத மந்திரவாதி - எனக்  கதை முழுவதும் பற்று அற என்ற கீதாசாரத்தைப், பாத்திரங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.


திவ்யாவின் பாட்டி, தொண்ணூற்றி ஆறு வயதில் கூட எல்லோரையும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள். எண்பத்தியாறு வருடங்களாக அவள் மனதில் தீராச் சீற்றம் கனன்று கொண்டே இருக்கின்றது. சுபாவின் பாட்டி இறக்கும் பொழுது நூற்றி இரண்டு வயது. இறப்பதற்கு முன்னாள், ஒரு வருடம் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். தனக்கு மட்டும் தெரியும் காலனிடம் அடிக்கடி, காற்றில் கத்திச்சண்டை போடுகிறாள். முதுமையின் தனிமை, ஏக்கம், இயலாமை, மரணத்தைப் பற்றிய பயம்(thanatophobia) முதலியவற்றை இக்கதாப்பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன.


கதைசொல்லி தன் கிராமத்தில் நிறையப் பேய்கள் இருந்தன என்றும், நகரத்தில் அவை மனித ரூபத்தில் இருப்பதாகவும் பகடியாகச் சொல்லுகிறான். கதையில் பேய், குழந்தையாக , இளம்பதின்வயது பெண்ணாக (early teen girl), இளம்பெண்ணாக , மந்திரவாதியாக (ஆண்) உருவகப் படுத்தப் படுகின்றது. இது பேய்க்கதை அன்று. நம் ஆழ்மனத்தின் வன்மத்தின்(id) கதை; வன்மத்தை அடக்கும் மகாசக்தியின் கதை.


கதையில் குறை என்றால், கடைசிப் பத்தி(கதைப் பற்றிய குறிப்புக்கு முந்தைய பத்தி) cliche' யாக இருப்பது தான்.


இக்கதை காமிக்ஸாகவும், அனிமேஷன் திரைப்படமாகவும் வெளிவர வேண்டும் என்பது என் அவா.

***

ஃபெப்ருவரி 4, 2014 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.

***