Friday, November 27, 2015

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - விமர்சனம்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி




இந்த புத்தகத்தை மின்னூலாகப் படிக்க: https://play.google.com/store/books/details?id=tHCOCgAAQBAJ


முதல் பதிப்பு 1971-இல் வந்தது. 
தற்போதைய பதிப்பு - கிழக்கு பதிப்பகம்

***
அமிர்தம் - திலகம். மத்திய வயது. குழந்தை இல்லா தம்பதி. அமிர்தம் தன் இளமையில் நித்யாவைக் காதலிக்கிறான். தன் தகப்பன் தன்னை மீறி திருமணம் நிச்சயிக்க, நித்யாவிடம் நாளையே நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறான். நித்யா தன் தாயையும், மாமாவையும் சம்மதிக்க வைக்க அவகாசம் கேட்கிறாள். இவன் இப்பொழுதே பதில் சொல் என நச்சரிக்க, அவள் அமைதியாய் கண்கள் மூடி அந்த உணவகத்தின் மெல்லிய இசையை ரசித்துக்கொண்டிருகிறாள். இப்படியாக, அமிர்தம் - நித்யா காதல் முறிகிறது.
இருபது வருடம் கழித்து, ஒரு நாடகத்தில் நித்யாவின் சாயல்கொண்ட, நித்யாவின் துறுதுறுப்புகொண்ட பானுவை, அமிர்தம் சந்திக்கிறான். அவனுக்கு நாடகம் பிடிக்கவில்லை; தன் மனைவிக்காக வந்தான். நாடகம் முடிந்து, பானுவை காரில் அவள் வீட்டில் விட நேர்கிறது. இங்கே ஆரம்பிகிறது நாவலில் வேகம். தீ பற்றிக்கொண்டு சர்ரென்று செல்கிறது.
பானுவின் அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். பானுவின் சிறுவயதிலேயே அவன் இறந்துவிடுகிறான். தன் பழைய காதலியின் சாயை கண்டு, பானுவிடம் பழக ஆரம்பிக்கிறான், அமிர்தம். நல்லவேளை, பானுவின் அம்மாதான் நித்யா என கதையைக் கொண்டு செல்லவில்லை.
தன் முதுமையை இளமையாக மாற்றும் யயாதியாக அமிர்தம் பானுவைப் பார்க்கிறான். தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை திலகம் தாங்கமுடியாமல் சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கிறாள்; அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். தன் மகள் மணமான ஒருவருடன் பழகுவதை பானுவின் அம்மா கண்டிக்கிறாள். அமிர்தம் தன் ரசனைக்கேற்ற துணையுடன் இல்லை என்று பரிதாபப்பட்டும், அவனை உள்ளுராக ஒரு தகப்பன் நிலையிலும் (father figure) வைத்து, பானு அவன் மேல் ஈடுபாடு கொள்கிறாள். இவர்களிடையே நடக்கும் எண்ண மோதல்கள்தான் இந்த நாவல்.
அமிர்தமின் பயம், தயக்கம், செய்து பாப்போம் என்ற தைரியம், குழப்பம் ஆகியவற்றை அழகாக சித்தரித்துள்ளார் இந்திரா பார்த்தசாரதி. வயது பற்றிய obsessionதான் பானு மீதான காதலுக்கும், திலகத்தின் மீதான வெறுப்புக்கும் காரணமென  கடைசியில் அமிர்தம் உணர்கிறான்.
முடிவு ஏற்றுக்கொள்ளும்படியானது. அமிர்தமும், திலகமும், பானுவும், பானுவின் அம்மாவும் அப்படிதான் செய்திருப்பார்கள். கடைசி வரியில் வரும் தொலைபேசி யாருடையது? பிரமையோ, திலகமோ, பானுவோ, பானுவின் அம்மாவோ என கேட்கிறார் முன்னுரையில் தி.ஜானிகிராமன். நான் அது திலகமின் அழைப்பு என்கிறேன்.
நாவல் முழுவதும் பகடி, நவீன சிந்தனை, ஆண் பெண் உறவு, எக்சிஸ்ட்டென்ஷலிச கணங்கள் ஆகியவை விரவிக்கிடக்கின்றன.
நிகழ்காலத்திலிருந்து, இறந்தகாலத்திற்கும், பின் திரும்பவும் நிகழ்காலத்திற்கும் ஓரிரு வரிகளில் சட்டென அனாயசமாக, குழப்பமில்லாமல் மாறுகிறார் இந்திரா பார்த்தசாரதி.