Friday, March 6, 2020

வா.மு. கோமுவின் 'எட்றா வண்டியெ' - மதிப்புரை



சாமிநாதன் என்ற தலித் இளைஞனை அவனது 'பண்ணையார்' மகள் காதலிக்கிறாள். அவள் பெற்றோர் இவனைக் கொன்றுவிடுவர் என்ற அச்சத்தில் இவன் பிடிகொடுக்காமல் இருக்கின்றான். அவளோ தன் பெற்றோர் இந்தக் காதலுக்கு சம்மதித்து விட்டனர் என்றும், தன்னைப் பெண் கேட்குமாறும் நச்சரிக்கிறாள். ஒரு நாள் முழு போதையில் அவள் அம்மாவிடம் இவன் பெண் கேட்க, அந்த அம்மாள் இவன் நெஞ்சிலேயே மிதித்து விரட்டுகிறாள். அவள் தகப்பன் இவனை மிரட்டும்போது, தன் மேல் தப்பில்லை என்றும் அவர் பெண்தான் இவனை வலிய வந்து காதலித்ததாகக் கூறுகிறான். அன்றிரவு தன் பங்காளிகளுடன் சேர்ந்து, தன் பெண்ணை உயிரோடு எரித்துக் கொள்கிறார் 'பண்ணையார்'.

இதன் பிறகு சாமிநாதன் தன் ஜாதிப் பெண்களாக ஒருவர் பின் ஒருவராக காதலிக்கத் தொடங்குகிறான். 

லதா என்ற பெண்ணை காதலித்து சிவன்மலையில் திருமணமும் செய்து கொள்கிறான். ஆனால், அடுத்த நாள், அவள் பெற்றோர் தாலியை அறுத்து இவளையும் சாமிநாதனையும் காவல் நிலையத்தில் வைத்து அடித்து, பிரித்து வைக்கின்றனர். அடுத்த நாள் அவள் விஷம் குடித்து இறக்க இருக்கிறாள்.

சாமிநாதனுக்கும் மல்லிகாவுக்கும் நடக்கும் அந்த நீண்ட தொலைபேசி உரையாடல் pleasure of text-க்கு உத்திரவாதம்.

சாமிநாதனின் அப்பா காய்ச்சலுக்கு மருத்துவரைப் பார்க்கச் செல்வது ஒரு அத்தியாயம் முழுவதும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது. அவர் மருத்துவரிடம் காசு இல்லை என சொல்லிவிட்டு, வெளியில் வந்து மதுக்கடைக்குச் செல்கிறார்.

சாமிநாதனின் ஒவ்வொரு காதல் தோல்வியும் படிக்க சுவாரசியமாக உள்ளது.

குறைவாகப் படித்து, குறைந்த சம்பளத்தில் தறிபட்டறையில் வேலை செய்தும், விவசாயக் கூலியாகவும் இருக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் சின்னஞ்சிறு களிப்புகளையும் பெரும் துக்கங்களையும் இயல்பாக கடந்து செல்வதையும் வா.மு. கோமு சுவாசரியமாக சொல்லியுள்ளார்.