Thursday, December 31, 2015

அசோகமித்திரனின் 'யுத்தங்களுக்கிடையில்' - மதிப்புரை




'யுத்தங்களுக்கிடையில்' என்று தலைப்பு இருந்தாலும், நாவல் உலகப்போர்கள் பற்றி அல்ல. நூறு ஆண்டுகள் முந்தைய, ஒரு குடும்பத்தின் இரு தலைமுறைக் கதைதான் இந்நாவல்.

சிறிய நாவல். நான்-லீனியர் கதைசொல்லல் முறை. நான்- லீனியர் கதைசொல்லல் முறையை அசோகமித்திரன் 'கரைந்த நிழல்கள்' நாவலிலேயே வெற்றிகரமாகக் கையாண்டிருப்பார். இதே போன்ற கதைசொல்லல் முறையை அசோகமித்திரனின் மாணவாரான சாரு நிவேதிதா,  'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்' நாவலில் கையாண்டிருக்கிறார்.

பிடித்த கதாபாத்திரங்கள் பம்பாய் அண்ணா, சீதா, ராமேசன் உள்ளிட்டோர். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் இன்னாருக்கு இன்னின்ன உறவு என்று புரிந்துகொள்ள, இரண்டு மூன்று முறை படிக்க வேண்டும். ஆனாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் கதையையும் விரிவாக, சுவாரசியமாக சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன்.

இந்தியப் பெண்களின் சோகத்தை இந்த நாவலிலும் அசோகமித்திரன் சொல்லுகிறார். கதையில் நிறைய இளம் விதவைகள்; தொடரும் துர்மரணங்கள். சோகம்; பிழியப் பிழிய சோகம். ஆனால், படிக்க சுவாரசியாமாக உள்ளது. 'Pleasure of Text'-க்கு நல்ல உதாரணம் இந்த நாவல்.

இணையம் மூலம் வாங்க: http://www.udumalai.com/yutthankalukkukidaiyye.htm


Wednesday, December 30, 2015

தண்ணீர் - விமர்சனம்



அசோகமித்ரனின் 'தண்ணீர்' சிறிய, ஆனால், காத்திரமான நாவல். ஜமுனா, சாயா, பாஸ்கர் ராவ், டீச்சரம்மா, அவள் குடும்பம், ஜமுனா வீட்டு உரிமையாளர், ஜமுனாவின் தாய், மாமாவின் குடும்பம் என குறைந்த பாத்திரங்களே உள்ளன.

தண்ணீர் பஞ்சம் ஒரு பாத்திரமாகவே இருக்கிறது. அந்தக் கால தி.நகரும் ஒரு பாத்திரம்.

தண்ணீருக்காக மக்கள் நாயாய் அலைகிறார்கள். ஒரு தவலைத் தண்ணீருக்காக யாராரிடமோ, டீச்சரம்மா சிரித்துப் பேசவேண்டியிருக்கிறது. மழைநீரைப் பிடிக்கக்கூட மக்கள் அடித்துக்கொள்கிறார்கள்.

ஏற்கனேவே கல்யாணமான பாஸ்கர் ராவிடம், ஜமுனா ஏமாறுகிறாள். டீச்சரம்மா சொல்வதுபோல், ஜமுனா இடங்கொடுக்காமல், இது நடந்திருக்காது.

தூக்குபோட்டு சாக இருந்த ஜமுனா, வீட்டு உரிமாயாளர் மாமியால், தற்செயலாகக் காப்பாற்றப்படுகிறாள். மாடியில் குடியிருக்கும் ஜமுனாவை மாமி அந்தத் தருணத்தில் காண வரும் சம்பவம், நாவலில் ருசியானது. படித்துப்பாருங்கள்.

டீச்சரம்மா ஜமுனாவிடம் ஆறுதல் கூறும் அத்தியாயம் மிகவும் பிடித்திருந்தது. நீ ஏன் யாரும் உன்னைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என நினைக்கிறாய்; நான் உன் மீது அக்கறைகொண்டுள்ளேன், என டீச்சரம்மா ஜமுனாவிடம் கூறுகிறாள். இதேபோல் ஒரு சம்பவம் சில ஆண்டுகள் முன் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'Precious' என்ற படத்திலும் வரும். கர்பமாக இருக்கும் தன் மாணவியிடம், ஒரு ஆசிரியை , " I love you, Precious, "  என்று கதறி அழுவாள். இந்நாவலில், இந்த இடத்தில் டீச்சரம்மா அழ மாட்டாள். ஆனால், அவள் சொல்லும் அத்தனையும் சோகம். இது அசோகமித்திரனின் எழுத்தின் பலம்.

பதினைந்து வயதிலேயே டீச்சரம்மாவுக்கு திருமணமாகிவிடுகிறது. கணவனுக்கு தொடர்ந்து இருமல் வரும் நோய். முதலிரவு அறையிலேயே, அவளைத் தொட முயன்று, தோற்று, மனம் வெம்பி, தொடர்ந்து இருமுகிறான். டீச்சரம்மா நினைக்கிறாள், இந்த நிலையில்கூட இவன் தன்னைத் தொட நினைகிறானே; இவன் இந்த நிலையில் இருந்தும்கூட இவனுக்குத் திருமணம் செய்ய இவன் பெற்றோர் நினைக்கிறார்களே; இவள் இவனைக் இன்றே கொன்றாலும், இவன் பெற்றோர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள். ஆனால், இவள் இவனைக் கண்டிப்பாக கொல்ல மாட்டாள் என்று இவன் பெற்றோர்கள் தீர்மானமாக நம்புகிறார்கள். இந்த நினைப்பே, டீச்சர்மாவுக்கு இனிமேல் உள்ள வாழ்க்கை இப்படித்தான், அதை வாழ்ந்து கழிக்கலாம் என்ற தீரத்தை தருகிறது. அவள் கோவிலுக்கு போவாள், ஆனால் கடவுளிடம் வேண்ட மாட்டாள். கடவுள் முன் குமுறி அழ மாட்டாள்.

டீச்சரம்மா சொல்கிறாள், எனக்கு அப்பொழுது, சாக வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை, என்று. இந்நாவலில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம் அந்த டீச்சர்ம்மாள்.

ஜமுனாவின் அம்மா நினைவு தப்பி, ஜமுனாவின் மாமா வீட்டில் இருக்கிறாள். தான் கல்யாணம் ஆன புதிதில், தன் மாமியார் பஜ்ஜிக்காக் இரண்டு படி பயிரை ஆட்டாங்கல்லில் அரைக்க சொன்னாள்; உரலின் பாதி உயரம்தான் நான் இருந்தேன்; உட்கார்ந்து அரைக்கமுடியவில்லை; நின்றபடியே அரைத்துக்கொடுதேன். உன் அப்பாவும், அத்தையும் வாயே திறக்கவில்லை; அவ்வளவு செய்தும், நான் சாப்பிட எனக்கு ஒரு பஜ்ஜிகூடக் கிடைக்கவில்லை, என்று புலம்புகிறாள்.

இந்திய பெண்களின் சோகத்தையும், குடும்பம் என்ற அமைப்பின் அடக்குமுறையையும், புழுக்கத்தையும், வன்முறையையும், ஜமுனாவின் தாய் மற்றும் டீச்சரம்மா ஆகியோர் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

ரொம்ப நல்ல நாவல். படித்துப் பாருங்கள்.

புத்தகத்தை வாங்க: http://www.nhm.in/shop/9788183680875.html



Friday, December 25, 2015

நாகம்மாள் - விமர்சனம்




"All men are good; all men are bad." - மனநல மருத்துவர் திருநாவுக்கரசு.

ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள்-இல் நல்லவன்-கெட்டவன் என்ற binary opposition  இல்லை. அனைத்துக் கதை மாந்தர்களிடமும் நல்ல மற்றும் தீய குணங்கள் கலந்து உள்ளது. அதுவே இந்நாவலின் பலம்.

பெண்கள் சொத்துரிமை பெற வேண்டும் என்ற மையக்கருத்தை 1942-இலேயே பேசிய நாவல்.

கொங்குத்தமிழ் நாவலில் சரளமாக வருகிறது.

நாகம்மாள்-கெட்டியப்பன் இடையே இருக்கும் கள்ள உறவை obscure-ஆக சொல்லியிருக்கிறார் ஆர்.ஷண்முகசுந்தரம். சில கதைகளில்தான் obscurity கதைக்குப்  பொருந்தும்; வலு சேர்க்கும். நாகம்மாள் அத்தகைய ஒன்று.

சின்ன கதை, சிறிய நாவல். ரொம்பப் பிரமாதம் கிடையாது. ரொம்ப மோசம் கிடையாது. படித்துப் பாருங்கள்.

***

நாகம்மாள் நாவல் இணையத்தில் வாங்க: http://www.amazon.in/dp/8189945165


ஏசுவின் தோழர்கள் மற்றும் சத்திய சோதனை - விமர்சனம்







ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் அரசியல் கருத்துக்களின் தாக்கம் சாரு நிவேதிதாவிடம் இருந்திருக்கலாம்; அல்லது, இருவரும் ஒரே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இருவருக்கும் கம்யூனிசம்பற்றி ஒரே கருத்துதான் இருக்கிறது.

இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள், அசுவாரசியாமான ஒரு நாவல். கம்யூனிச போலந்தில் நடக்கும் கதை.

சுஜாதாவின் சில விஞ்ஞான கதைகளில் வேற்றுகிரக ஜீவிகள், மிகுந்த அடக்குமுறைக்கு ஆட்பட்டிருப்பார்கள். சகலத்திற்கும் 'ரேசன்' முறை, சகலத்திற்கும் அரசின் அனுமதி என இருக்கும். அவற்றை படிக்கும்போது அதீத கற்பனையோ என தோன்றும். கம்யூனிச போலந்தில் அவை நடைமுறையில் இருந்தது இந்நாவல் மூலம் தெரிகிறது.

கதைசொல்லி போலந்த் சென்றாலும், கதை, கதைசொல்லியின் வீடு, தூதரகம், தூதர் வீடு, என ஒரு குறுகிய வட்டத்தில் நடக்கிறது. நாவலாசிரியர் கம்யூனிசம் எளிய மனிதனை எப்படி பாதித்தது என இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். இதே கருத்தை வெங்கட் சாமிநாதனும் கூறுகிறார்.

'Frenzy of Exultations' என்ற அற்புதமான ஓவியத்தைப் பற்றி இந்நாவலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

Frenzy of Exultations




***

ஏசுவின் தோழர்கள் மின்னூல் வாங்க: https://play.google.com/store/books/details?id=I3GOCgAAQBAJ


***

சத்திய சோதனை



ஓரிரவு ரயில் பயணத்தில் படித்த நாவல். இலக்கிய ஆசிரியர் pulp எழுதலாம். சுஜாதாவின் pulp அளவுக்குக்கூட இந்நாவல் இல்லை. கண்டிப்பாகப் படிக்க வேண்டாம்.

***