Saturday, November 28, 2015

வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் - விமர்சனம்

வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் - சாரு நிவேதிதா





புதிய தலைமுறை வார இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு, தற்போது உயிர்மை வெளியீடாக வந்துள்ளது.


***


புதிய தலைமுறையில் தொடராக வந்தபோது, பெரும்பாலானோர் இதைப் படிக்கவில்லை என்ற வருத்தம் உண்டு. ஆனால், நிறைய அரசுப்பள்ளிகளில் புதிய தலைமுறை வாங்குகிறார்கள் என்பதையும், ஆசிரியர்கள் இத்தொடரை விரும்பிப் படித்தார்கள் என்பதையும் அறிவேன்.


வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் கட்டுரைகளை ஒருசேரப் படித்தபோது பத்தி இலக்கியத்தில் இது ஒரு பாய்ச்சல் எனப் புரிந்தது.  


குழந்தை வளர்ப்பு, சினிமா, இலக்கியத் திறனாய்வு, அகிம்சை, பயணம், உணவு, அறம், சங்க இலக்கியம், இசை, தனிமனித சுதந்திரம் எனப் பல்வேறு தலைப்புகளில், சுவையாக, போதனை நடை இல்லாமல், அலுக்காமல், படிக்க சுவாரசியமாக இருக்கிறது. பல இடங்களில் வாய்விட்டு சிரித்தேன்.


சல்மான் கான், காந்தி பற்றிய இடம் நிறைய யோசிக்க வைத்தது. க்ளாரா - இனியா சம்பவம் நம் இந்திய வாழ்வின் பிரதிபலிப்பு. ராமபத்திரன் கதை, ஒய்வு பெற்றவர்கள் அஞ்சல் அலுவகத்தில் படும் துன்பங்கள், அஞ்சல் நிலைய அதிகாரி - ஓட்டுனர் போன்ற நிறைய இடங்கள் நாவல் போலவே இருந்தன; அபுனைவு என்றே தோன்றவில்லை.


முத்துசாமி ஐயர் - பாட்டி நிகழ்வு எல்லாம் அறத்தின் சாட்சிகள். இந்த புத்தகம் படித்த பிறகுதான் 'திருடன் மணியன் பிள்ளை'யைப் படித்தேன்; 'மண்ணில் தெரியுது வானம்' வாங்கினேன்.

அறம், சத்தியம், நேர்மை போன்றவைகளை ஒருவர் பேசினாலும் எழுதினாலும் அலுப்பு ஏற்படும். ஆனால், இவ்விசயங்களை சுவாரசியமாக, ஏற்கும்படியாக, மனமாற்றம் அடையச் செய்வதாக இருந்தது இந்தத் தொகுப்பில்.

(ஜூலை 13, 2015 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.)

***

இல்லாதவர்களின் நிழல்கள் - விமர்சனம்

இல்லாதவர்களின் நிழல்கள் - சாரு நிவேதிதா
(சாரு நிவேதிதா சிறுகதை, உயிர்மை ஃபெப்ருவரி, 2014)




'Diabolically Yours' என்ற தலைப்பில் 'Exotic Gothic 5, Volume II' என்ற புத்தகத்தில் ஆங்கிலத்தில் முதலில் இக்கதை வெளியானது.



***



கதை. கதைக்குள் ஒரு கதை. அதனுள் சில கனவுகள். நூற்றாண்டுகளின் ஊடே, பல பிறப்புகளின்  ஊடே பயணிக்கும் கதாப்பாத்திரங்கள். குழப்பமில்லாத, சுவாரசியமான, திகிலூட்டும் நடை.


ஒரு சிறந்த பேய்க்கதை. படிக்கும் போது, அடுத்து என்ன நடக்குமோ எனும் பரபரப்பு.


தைரியம் என்பதன் அர்த்தம் பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாதது. கதையப் படிக்கும் பொழுது, தைரியத்துடனே படித்தேன்!


இருண்மையின் முடிவில் பெருவொளி தெரிகின்றது. தொண்ணூற்றி ஒன்றாவது பெண்ணால் எப்படி மந்திரவாதியைக் கொல்ல முடிந்தது என்று அறியும் பொழுது, கடவுளின் வல்லமை புலனாகிறது.


அதீதச் செல்லம் ஒரு குழந்தையை எப்படிக் கெடுக்கிறது என்பதையும், குழந்தையைக் கவனிக்காமல் வெற்று
ஆன்மீகத்தை நாடினால் என்ன ஆகும் என்பதையும் சாரு அருமையாகக் கூறுகிறார்.


ஒன்றின் மேல் வெறுப்படைந்து (உ-ம்: காதல் தோல்வி, குடும்பத்தின் மீது ஏற்படும் வெறுப்பு ), அதனால் ஏற்படும் சூன்யத்தை நிரப்ப, மற்றொன்றின் மேல் ஈர்க்கப்பட்டுச் செய்யும் எந்தச் செயலுமே(உ-ம்: மற்றொரு காதல், துறவறம்) மகிழ்ச்சியைத் தராது என் சாரு அழாகாக விளக்குகிறார்.


இறந்த தாயை மறக்க முடியாத குழந்தை, குழந்தையின் ஆவியை நிராகரிக்க முடியாத சுபா, தொண்ணூற்றி ஒன்றாவது பெண்ணின் மேல் நூறு ஆண்டுகள் ஆகியும் வன்மம் குறையாத மந்திரவாதி - எனக்  கதை முழுவதும் பற்று அற என்ற கீதாசாரத்தைப், பாத்திரங்கள் உணர்த்திக் கொண்டே இருக்கின்றன.


திவ்யாவின் பாட்டி, தொண்ணூற்றி ஆறு வயதில் கூட எல்லோரையும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள். எண்பத்தியாறு வருடங்களாக அவள் மனதில் தீராச் சீற்றம் கனன்று கொண்டே இருக்கின்றது. சுபாவின் பாட்டி இறக்கும் பொழுது நூற்றி இரண்டு வயது. இறப்பதற்கு முன்னாள், ஒரு வருடம் படுத்த படுக்கையாகக் கிடக்கிறாள். தனக்கு மட்டும் தெரியும் காலனிடம் அடிக்கடி, காற்றில் கத்திச்சண்டை போடுகிறாள். முதுமையின் தனிமை, ஏக்கம், இயலாமை, மரணத்தைப் பற்றிய பயம்(thanatophobia) முதலியவற்றை இக்கதாப்பாத்திரங்கள் பிரதிபலிக்கின்றன.


கதைசொல்லி தன் கிராமத்தில் நிறையப் பேய்கள் இருந்தன என்றும், நகரத்தில் அவை மனித ரூபத்தில் இருப்பதாகவும் பகடியாகச் சொல்லுகிறான். கதையில் பேய், குழந்தையாக , இளம்பதின்வயது பெண்ணாக (early teen girl), இளம்பெண்ணாக , மந்திரவாதியாக (ஆண்) உருவகப் படுத்தப் படுகின்றது. இது பேய்க்கதை அன்று. நம் ஆழ்மனத்தின் வன்மத்தின்(id) கதை; வன்மத்தை அடக்கும் மகாசக்தியின் கதை.


கதையில் குறை என்றால், கடைசிப் பத்தி(கதைப் பற்றிய குறிப்புக்கு முந்தைய பத்தி) cliche' யாக இருப்பது தான்.


இக்கதை காமிக்ஸாகவும், அனிமேஷன் திரைப்படமாகவும் வெளிவர வேண்டும் என்பது என் அவா.

***

ஃபெப்ருவரி 4, 2014 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.

***

Friday, November 27, 2015

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - மதிப்புரை

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - சாரு நிவேதிதா







நகத்தை நறுவிசாக வெட்டடாதவனும், மணிக்கட்டின் கீழ் சாம்பார் வழிய வழிய சாப்பிடுபவனும் மனிதனே அல்ல என்று கருதுபவர்களுக்கு, subaltern வாழ்க்கையை முகத்தில் அறைந்துச் சொல்வதே இந்நாவல். சூர்யாவின் சிறுவயது தோழன் இப்போதும் மலம் அள்ளுகிறான். ஏன் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய் எனச் சூர்யா கேட்க, அவனைப் பீச்சந்துக்கு அழைத்துச் சென்று காமிக்கிறான். சூர்யா அருவருப்பில் வாந்தி எடுக்கிறான்.


தன்னை இரண்டு மணிக்கு வரச்சொல்லி, வந்தவனைக் கண்டுகொள்ளாமல், ஒரு தோழியிடம் அரைமணி நேரம் பேசிகொண்டிருக்கும் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் சூர்யா, சக மனிதனையும் தன்னைப் போல் மதிப்பதே அடிப்படை நாகரிகம் என்று கூறுகிறான்.


கோ.கி.தமிழ்வீறு தன் சகாவைப் (peer) பார்த்து, சிறு வயதில் சுய இன்பம் செய்யக் கற்றுக் கொள்கிறான். ஒன்பது-பத்து வயதில், விந்து வெளிவரும்போது பயம் கொள்கிறான். யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என, காட்டுக் கோயிலுக்கும், ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்கும் செல்ல ஆரம்பிக்கிறான். கோயில் அர்ச்சகர் அவன் உறுப்பைச் சுவைக்க, செய்வதறியாது உடன்படுகிறான். Child Sexual Abuse என்பது கிராமம், நகரம் என எங்கும் நீக்கமற நடந்து கொண்டு தான் இருக்கின்றது. செட்டியார், குருஜி, ஊருக்குப் புதிதாக வரும் வேசி, வேசியின் மகள் முதலியோர் மூலம் சாரு இளம்பதின் வயதினருக்குறிய (early teen) பாலியல் பிரச்சனைகள், குழப்பங்கள், ஆசைகள், கட்டுக்கதைகள் (misconceptions) ஆகியவற்றை ஆழமாக, அழகாகச் சொல்லுகிறார். 'அழியாத கோலங்கள்' போன்ற மிகச் சில படைப்புகளே இதைப் பற்றிப் பேசுகின்றன.


சூர்யாவின் உறவினர்களுள் சிலர், Incest, கள்ளக் காதல் என இருந்தாலும், அவர்கள் உறவில் ஒழுங்கான ஒழுங்கின்மையைக் (regularly irregular) (சீரான ஒழுங்கின்மையைக்) காண முடிகிறது. உதாரணமாக, வரதராஜூவின் வைப்பாட்டி கணவனிடம், சூர்யாவின் அவ்வாவும் அத்தையும் மரியாதையுடனே பேசுகின்றனர். ஆனால், ஆர்த்தியின் பள்ளிக்காதல்களிலும், கமலக்கண்ணனுடனான உறவிலும், ஒழுங்கின்மையான ஒழுங்கின்மையைத் (irregularly irregular) (சீரற்ற ஒழுங்கின்மையைத்) தான் காணமுடிகிறது. இதுவே, சூர்யாவின் கோபத்திற்குக் காரணம்.


மிஸ்ரா, தேநீருக்காகக் கையேந்துபவனிடம், 'பிச்சையெடுக்காதே, திருடு; அகப்பட்டு, அடித்தால் திருப்பியடி; சிறையில் தள்ளினால், வெளியே வந்து திரும்பத் திருடு' எனக் கூறுகிறான். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதி சும்மாவா சொன்னான்.


தற்கொலை குறுங்கதைகள் சாந்தியின் ஆதித் தாயாக, நான் கிரணைப் பார்க்கிறேன்.

***

ஃபெப்ருவரி 6, 2014 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.

***

ராஸ லீலா - விமர்சனம்




ராஸ லீலா - சாரு நிவேதிதா

முதல் பதிப்பு - 2006

இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/9789351351955.html


***





(ஏப்ரல் 30, 2014 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.)

தான் வேலை செய்யும் தபால் நிலையத்தில், ஒரு அசுவாரசியமான நாளில், கண்ணாயிரம் பெருமாள் கழிப்பறைக்குச் செல்கிறான் - இவனுக்கு ஒரு வினோத குணமுண்டு. இவன் மூத்திரம் பெய்தால் ஐந்து நிமிடத்துக்கும் மேலாகும் - அப்பொழுது தொலைபேசி மணி அடிக்கிறது. தொலைபேசி அழைப்பு அவன் மேலதிகாரி பரமானந்துக்கானது. மேலதிகாரிகள் அவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளைத் தாங்களே எடுத்துப் பேசுவதில்லை - பெருமாள் போன்ற ஸ்டேனோக்கள் தொலைபேசியை எடுத்து, யார் என்று விசாரித்து, மேலதிகாரிக்கு buzzer அழுத்தி, அவர் சரி என்று சொன்னால் மட்டுமே, அழைப்பை மேலதிகாரிக்கு இணைப்பு தர வேண்டும். பெருமாள் தன் இருக்கைக்கு திரும்பும்பொழுது, பரமானந்த் தன் ஆர்டர்லி மூலம் பெருமாளை அழைகிறார்.

“உங்கள் தொலைபேசி வேலை செய்யவில்லையா பெருமாள்?”

“வேலை செய்கிறதே சார்.”

“தொலைபேசி மணி ரொம்ப நேரம் அடித்ததே. பிறகு, ஏன் எடுக்கவில்லை?”

பெருமாள் பதிலேதும் கூறாமல், வெளியே செல்கிறான். முறையான விடுப்புக் கடிதமேதும் தராமல், ஒரு வருடம் அவன் அங்கு செல்லவே இல்லை.

சிறைத்துறையில் வேலை செய்யும்பொழுது அவன் உயரதிகாரி சூப்பரின்டென்டன்ட் அண்ணாசாமிக்கு, பெருமாள் ஞாயிற்றுகிழமைகளில் வேலைக்கு வருவதில்லை என வருத்தம். ஒரு சனி மாலை ஐந்து மணிக்கு, அவர் பெருமாளுக்கு கோப்புகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார் - சிறைவாசிகளுக்கான பீடி reminder எழுதுவதற்காக. எவ்வளவு வேகமாக எழுதினாலும், இரவு 9 மணிக்கு மேலாகிவிடும் என்றுணர்ந்த பெருமாள், " நான் கிளம்புகிறேன் சார்," என்கிறான். "தாராளமாகக் கிளம்புங்கள் A 2 சார் ( A 2 என்பது பெருமாளின் பதவிநிலைப் பெயர் - மேலும் அரசு அலுவலகங்களில் யாரும் யாரையும் பெயர் சொல்லி அழைப்பதில்லை) - நாளை காலை சாவகாசமாக வந்து எழுதுங்கள்," என்று கூறுகிறார். பெருமாள் அடுத்த நாள் செல்லவில்லை. மருத்தவ விடுப்புக்கான கடிதத்தை அனுப்ப்பிவிட்டு ஊருக்குச் செல்கிறான். அதுசமயம், டில்லி அரசாங்கத்தின் ரேஷன் துறையில் வேலை கிடைக்க, அங்கு செல்கிறான்.

தான் லஞ்சம் வாங்குவதில்லை என பெருமாள் கூறுகிறான். ஏற்கனவே மாமா வேலை செய்வது போலிருக்கிறது. இன்னும், லஞ்சம் வாங்க ஆரம்பித்தால், தன்னை விற்பது போலாகிவிடும் என்பது அவன் எண்ணம்.

அவன் என்ன வேலை செய்கிறான் என ஒரு பத்திரிக்கை பேட்டியில் கேட்டபொழுது, மாமா வேலை செய்வதாகக் கூறினான். டில்லியில் அவன் மேலதிகாரி கண்ணா, சுஷ்மா என்னும் பெண் குமாஸ்தவுடன் அடிக்கடி தன் கேபின் அறையை வெளியே தாழிடச் சொல்லிவிட்டு, உடலுறவு கொள்வான். யார் வந்து கேட்டாலும் - டில்லியின் கவர்னரே வந்தாலும் - கண்ணா ஆய்வுக்காக வெளியே சென்றிருக்கிறார் என பெருமாள் பொய்சொல்ல வேண்டும்.

பெருமாள் தன் உயரதிகாரிகளை பைத்தியக்காரர்கள் என்றும், தன் அலுவலகத்தை மனநோய் விடுதி என்றும், வதை முகாம் என்றும் கூறுவதுண்டு.

பெருமாளின் மனைவி மீரா, தினமும் ஐந்து மணிக்குள் எழுந்து, காலை மற்றும் மதிய உணவைச் சமைத்து, தன் மகன் கார்த்திக்கை பள்ளிக்கூடம் அனுப்பி, சின்மயா நகரிலிருந்து மவுண்ட் ரோடு செல்லும் 8:40 மணிப் பேருந்தைப் பிடிப்பதற்குள், போதும் போதும் என்றாகி விடும். இதில், பேருந்தில் தன் மேல் உரசும் காமுகர்களிடமிருந்து (frotteurs) தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

சிறைத்துறையில் இருக்கும் பொழுது - இத்துணை வருடங்கள் அதிகாரிகளிடம் குழைந்து பேசிப்பேசி - கனகசபை முதலிய, தன் சக குமாஸ்தாக்களின் செய்கைகள் அவனுக்கு ஒரு கழைக்கூத்தாடியின் குரங்கின் சேஷ்டைகளை ஞாபகப்படுத்தும்.

தன் மேலதிகாரிகள் அனைவருக்கும் தொப்பையே இல்லாமலிருப்பதையும், தன் சகாக்கள் அனைவரும் தொப்பையும் தொந்தியுமாக இருப்பதையும் பெருமாள் கவனித்திருக்கிறான். குமாஸ்தாக்கள் யாரும் தினமும் சவரம் செய்வதில்லை என்றுவேறு பரமானந்த் போன்றோர் கோபம் கொள்கின்றனர். அதிகாரிகளுக்கென்ன, அவர்கள் காலை எழுந்து, பூங்காவில் நடைபயிற்சி முடித்து, வீட்டுக்கு வந்து குளித்து, செய்தித்தாள் படித்து, உணவருந்தி, சாவகாசமாக காரில் அலுவலகம் வரலாம். குமாஸ்த்தாக்களின் வாழ்கை முறை வேறு.

தன் மதிய உணவைத் தானே தூக்கிக்கொண்டு வருவது இழுக்கு என, அஞ்சல் பொருள் கிடங்கு சூப்பரின்டென்டன்ட் இந்திராணிக்கு ஒரு நாள் தோன்றியது. அதன்பின், தினமும் அவர் ஆர்டர்லி திருப்பதி, சேத்துபட்டில் இருக்கும் அலுவலகத்திலிருந்து ரயில் பிடித்து, கௌரிவாக்கதிலிருக்கும் இந்திராணியின் வீட்டுக்குச் சென்று, மதிய உணவு கேரியரைத் வாங்கிக்கொண்டு, அலுவலகம் வந்து அவரிடம் கேரியரைக் கொடுத்துவிட்டு, பின் அவர் சாப்பிட்டு முடித்த பின், ரயில் பிடித்து கௌரிவாக்கம் சென்று கேரியரைக் கொடுத்து விட்டு வரவேண்டும். பெருமாள் கணக்குப் போட்டு பார்த்ததில், இந்திராணியின் மதிய உணவுச் செலவுக்கு மாதம் ஏழாயிரம் ரூபாய் ஆனது.

வரதன் பெருமாளின் நண்பன். சர்கிள் ஆபீஸ் முதன்மை PMG, ரங்கராஜனுக்குக்கு வரதன்தான் ஸ்டெனோ.ஒரு நாள் மாலை, ஐந்து மணி முதல் எட்டு மணி வரை, வரதனுக்கு dictation தந்து, ஒரு மணி நேரத்தில் வேண்டும் என்கிறார் ரங்கராஜன். தன் உயிரைக் கொடுத்து தட்டச்சு செய்யும் வரதன் இரவு 12:30 மணிக்கு முடிக்கிறான். அதுவரை, ரங்கராஜனின் சாரதி ஏழுமலை அலுவலகத்திலேயே காத்திருக்கிறான். வேலை முடிந்து, இருவரும் ரங்கராஜன் வீட்டுக்கு நள்ளிரவில் செல்கின்றனர். கோப்பை வாங்கிக் கொள்ளும் ரங்கராஜன், நன்றி கூட சொல்லாமல், கதவைச் சாத்தப் போகும்பொழுது, ஏழுமலை, “சார், வரதன் சாரை, அலுவலகக் காரில் அவர் வீட்டில் போய் விட்டு வரட்டுமா?” எனக் கேட்கிறான். ரங்கராஜன், மிகுந்த ஆச்சரியத்துடன், “அதெல்லாம் பழக்கமில்லையே? சரி, என்னவோ செய்,” எனக் கூறுகிறான்.

இவ்வுலகில் எங்கே அதிக வன்முறை நிகழ்கிறது? போர்க்களத்திலா? வீட்டிலா? வேலை செய்யும் இடத்திலா? அலுவலகங்களில்தான், உலகின் மோசமான வன்முறை அரங்கேறுகிறது, என நம் முகத்தில் அடித்துச் சொல்கிறது ராஸலீலா.

ரயில்வேத்துறை என்பது அஞ்சல் துறையை விட மிகப் பெரியது; அங்கே, உங்களுக்கு நானூறு கதைகள் கிடைக்கும் என நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார், இந்நாவலின் மலையாள மொழிபெயர்பாளர் ராமகிருஷ்ணன். இந்தியாவில், இந்த போக்கு அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, தனியார் துறையிலும் உண்டு என்பது பெருமாளின் எண்ணம். சென்னையின் பிரபலமான தனியார் மருத்துவமனையில் இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டு, பரிசோதனைக்காக அங்குத் திரும்பச் செல்கிறான் பெருமாள். அந்த மருத்துவர், பெருமாள் கொண்டு சென்ற ECG, Echo மற்றும் ரத்தப் பரிசோதனை முடிவுகளைக் கிஞ்சித்தும் பார்காமல், மாத்திரைகளை எழுதித் தருகிறார்; ஒவ்வொரு மாத்திரையும் எதற்காக உட்கொள்ள வேண்டும் என்றுகூட கூற அவருக்குப் பொறுமையில்லை. இதில் பெருமாளின் சந்தேகங்களை அவரிடம் எப்பொழுது கேட்பது?

சென்னையிலிருந்து தினமும் காட்பாடிக்கு விரைவு ரயில்களில் செல்லும் 'Without Club' இல் பெருமாள் போன்ற குமாஸ்தாக்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வங்கி ஊழியர்கள் என சகலரும் அடக்கம். அவர்களின் சீசன் பயணச் சீட்டில் பாசஞ்சர் ரயிலில் செல்லத்தான் அனுமதி. ஆனால், அதில் சென்றால் அலுவலகம் செல்ல மதியம் ஆகிவிடும். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உபயத்தால், இவர்கள் அடிக்கடி, பறக்கும் படையினரிடம் மாட்டிகொண்டு, அபராதம் கட்ட வேண்டியிருந்தது. சிலசமயங்களில் அத்துணைப் பேருக்கும், போதிய அபராதத் தொகை செலுத்த முடியாமல், ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் உட்கார வைக்கப்பட்டனர். பெருமாள் நினைத்தான்,"ஏன் இத்தனையும்? அரசு வேலையில் உள்ள அனுகூலங்களால்!!"

பெருமாள், அஞ்சல் அலுவலகத்தில் படும் இன்னல்களையும், அவன் சுயமரியாதையையும், அடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான அவனது தீராச் சமரினையும், காதல் மற்றும் காமத்தை அவன் தேடி அலைவதையும், தன் நண்பர்கள் மற்றும் பிரியமானவர்களால் தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதையும், ஏமாற்றப் படுவதையும், சொல்லிச் செல்கிறது ராஸலீலா.

“I hate all women, because they deny me sex,”  என்று 'பெண்கள்' நாவலில் எழுதுகிறான் பெருமாள். அஞ்சல் துறையில் தன் அலுவலகத் தோழி அகிலா, தொலைபேசி செக்ஸில் பின்னி எடுப்பாள் என்றும், நேரடி உடலுறவுக்கு ஒருபோதும் சம்மதித்ததில்லை என்றும் கூறுகிறான் பெருமாள். அமெரிக்கா திவ்யா, மலேசியா பத்மினி, லயா, ஃபௌசியா - அனைவரும் காதல் ரசஞ்சொட்டும் கடிதங்களை பெருமாளுக்கு அனுப்புகின்றனர். பெருமாளும் அவர்களை மிகத் தீவிரமாகக் காதலிக்கிறான். அவர்கள் அவனுடன் மணிக்கணக்கில் பேசுகின்றனர்; எந்தெந்த நிலைகளில் உடலுறவு கொள்ளலாம் எனப் பேசி மகிழ்கின்றனர்; orgasam அடைகின்றனர் - இவையனைத்தும் இணைய அரட்டைகளில். ஆனால், அவர்களில் ஒருவர்கூட சென்னை வரும்போது பெருமாளை சந்திப்பதைத் தவிர்க்கின்றனர் - இங்கீதத்துக்குக்கூடச் சந்திக்கவில்லை. மலேசியா திரும்பும் பத்மினி, நான்கு மணிக்கு வகுப்பு முடிந்ததும், சரியாக 4:05 மணிக்கு பெருமாளுக்கு, “Are you free to chat with me now?” என்று மெயில் அனுப்புகிறாள். பெருமாள் பதில் அனுப்பவில்லையெனில், உடனே அவன் கைபேசிக்கும், landline தொலைபேசிக்கும் அழைக்கிறாள். இதற்கு, பெருமாள் கூறும் காரணங்கள்:

1.) அந்நிய மண்ணில் பேச்சுதுணைக்குகூட யாருமற்ற தனிமை.

2.) தற்சமயம், அவர்கள் ஒன்று வேலைக்குச் செல்வதில்லை அல்லது படித்துக்கொண்டிருகிறார்கள்.

3.) அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

4.) தீர்க்கப்படாத Electra Complex: திவ்யா பெருமாளின் ஒவ்வொரு செய்கையையும் தன் தகப்பனோடு ஒப்பிடுகிறாள்.

ஆனந்தன் கல்லூரியில் படிப்பதற்காகவும், ஃப்ரெஞ்சு படிப்பதற்காகவும், வட்டிக்கு கடன் வாங்கி உதவுகிறான் பெருமாள். வட்டியும் முதலும் சேர்ந்து எண்பதாயிரம் ரூபாயில் வந்து, பெருமாளை நெருக்குகிறது. வேலை கிடைக்கப் பெற்ற ஆனந்தன், பெருமாளுக்கு உதவாமல், நிலம் வாங்கப் போவதாகக் கூறுகிறான்.

ம்யூஸ் பெருமாளைப் புறந்தள்ளிவிட்டு, நரேனை நாடுகிறாள்; நரேனிடமிருந்து மணியிடம் தாவ நினைக்கும் ம்யூஸின் வலையில், மணி ஒருபோதும் விழவில்லை. ரஞ்சனும் பெருமாளும் அத்யந்த நண்பர்கள் - பெருமாள் ரஞ்சனக்கு குமாரசாமியை அறிமுகப் படுத்தும் வரை. பெருமாளின் சைபர் மற்றும் நேர் காதல்களையும் (பத்மினி, திவ்யா, லயா, ஸ்பந்தனா, டெய்ஸி, ம்யூஸ்), நட்புறவுகளையும் ( ஆனந்தன், ரஞ்சன், ராகவன், செலின், உ.த.எ. நிர் 4), அவ்வுறவுகளின் அபத்தங்களையும் படிக்கும் போது, கசப்பே மிஞ்சுகிறது.

வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் இடர்களை (Occupational Hazards) ராஸலீலா, தொடந்து பதிவு செய்கிறது. ஏழு வயது சிறுமியைக்கூட, பாங்காக்கில் அரசாங்கமே நடத்தும் விபச்சார விடுதிகளில் காணமுடிகிறது. ஈஸானின் வரலாற்றையும், கலாசார செருக்கையும், ஈஸான் மொழி எவ்வாறு 'தாய்' அரசால் ஒடுக்கப் பட்டது என்பதையும், பாங்காக்கில் அவனிடம் கூறுகிறாள் காஞ்சனா என்னும் பாலியல் தொழிலாளி. பாரிஸில் அவன் எண்பது வயது மூதாட்டிக்கூட பாலியல் தொழிலாளியாக இருப்பதையும், செக்ஸ் க்ளபுகளையும், ஓரினச்சேர்க்கையாளர்கள் க்ளபுகளையும், S & M க்ளபுகளையும் பார்க்கிறான். ஓர் ஆந்திர கிராமத்தில், விபச்சாரம் குடிசைத் தொழிலாக இருந்ததையும் - வாடிக்கையாளர்களுக்கு எண்ணை குளியல், கறிவிருந்து, திருப்தியான உடலுறவு; இவை அனைத்தும் ஐநூறு ரூபாய்க்கு - இத்தொழில் எப்படி சந்திரபாபு நாயுடுவால் அழிந்தது என்றும் பெருமாள் கூறுகிறான்.

பெருமாள் தனக்கு பிடித்தவர்கள் பட்டியலில் செவிலியர்களை - அவர்களின் உடல் கவர்ச்சிக்காகக் - குறிப்பிடுகிறான். இதய அறுவை சிகிச்சை முடிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவன் தங்கியிருக்கும்போது, ஒரிரவு தூக்கத்தில் திரும்பிப் படுக்கிறான். உடனே, அவனருகில் வந்து, ஏதேனும் வேண்டுமா எனக் கேட்கிறார் ஒரு செவிலியர். அவ்வறையில் இருக்கும் இரு நோயாளிகளையும் அந்த செவிலியர், இரவு முழுதும் கண் விழ்த்து பார்த்துக் கொள்கிறார்.

இந்நாவல் உடலையும், உடலரசியலையும், உடலின் ஆசைகளையும், ஏக்கங்களையும், வலிகளையும், சமரசங்களையும் பேசுகிறது. உலகப்பிரசித்த வதை வகைகளைப் பட்டியலிடும் அத்தியாயம் இந்நாவலை முழுமை ஆக்குகிறது.

ஹெலன் ஒரு சுவாரசியமான கதாப்பாத்திரம். ஒருவருக்கு அரசியலில் முன்னுக்கு வர முப்பது ஆண்டுகள் ஆகுமென்றால், ஹெலனுக்கு மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அந்த கிராமத்தில், முதல்வரின் புதல்வர் கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் ஹெலன் இவ்வாறு கூறுகிறார்: "இந்தியாவின் தலைநகரம் புதுடில்லி அல்ல. தலைவரின் புதல்வர் வாழும் ஆழ்வார் திருநகரே, இந்தியாவின் தலைநகரம்." MLA தேர்தலில் செலவு செய்வதற்காகக் கட்சித்தலைமை கொடுக்கும் முப்பது லட்ச ரூபாயை பதுக்கி, தேர்தலில் தோல்வி அடைகிறார். தேர்தல் முடிவு வரும் முன்பே, பணக்காரர்களின் இருப்பிடமான க்ரீன்வேஸ் சாலையில், நல்ல வீடு எங்குள்ளது என ஆராய்ச்சி செய்கிறார்.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வாங்க வந்து, கூட்டநெரிசலில் சிக்கி நாற்பது பேர் உயிரிழந்த சம்பவத்தை, டிசம்பர் 2005 தினசரிகளைக் கொண்டு, சாரு நிவேதிதா மேற்கோள் காட்டுகிறார். முதலில் வரும் இருநூறு பேருக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும் என வதந்தியைப் பரப்பிய எதிர்கட்சியே இச்சோகநிகழ்வுக்குக் காரணம், என அப்போதைய முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார். இதை மறுக்கும் அப்போதைய எதிர்கட்சித் தலைவர், வெள்ள நிவாரண நிதி வழங்க, தங்கள் 'சேவையையும்' பயன்படுத்திக்கொள்ள அரசு தவறி விட்டது எனக் கூறுகிறார். ஒரு பக்க சாய்வின்றி, இந்நிகழ்வுக்கு யார் காரணம் என வாசகனின் முடிவுக்கே சாரு நிவேதிதா விட்டுவிடுகிறார்.

'இன்னல்' என்றும் 'கசப்பு' என்றும் நான் கூறினாலும், இந்நாவல் இருண்மையைப் பேசினாலும், இத்துன்பங்களும், கசப்பும் படிக்க சுவாரசியமானவை. பதினாறாம் அத்தியாயம் ஒரு பின்நவீனத்துவக் களியாட்டம். மேலும், ஃபங்குலா, கோடம்பாக்கக் கதைகள், ‘பெருமாள் சி’, டெய்ஸி குறுக்கு வழியில் முன்னேறிய கதை முதலியவையும் சுவாரசியமானவை.

சேவை வேறு, அடிமைத்தனம் வேறு. உங்களுக்கு கீழ் பணிபுரிபவர் ஒன்றும் உங்கள் அடிமை அல்ல. Period.

***

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - விமர்சனம்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி




இந்த புத்தகத்தை மின்னூலாகப் படிக்க: https://play.google.com/store/books/details?id=tHCOCgAAQBAJ


முதல் பதிப்பு 1971-இல் வந்தது. 
தற்போதைய பதிப்பு - கிழக்கு பதிப்பகம்

***
அமிர்தம் - திலகம். மத்திய வயது. குழந்தை இல்லா தம்பதி. அமிர்தம் தன் இளமையில் நித்யாவைக் காதலிக்கிறான். தன் தகப்பன் தன்னை மீறி திருமணம் நிச்சயிக்க, நித்யாவிடம் நாளையே நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறான். நித்யா தன் தாயையும், மாமாவையும் சம்மதிக்க வைக்க அவகாசம் கேட்கிறாள். இவன் இப்பொழுதே பதில் சொல் என நச்சரிக்க, அவள் அமைதியாய் கண்கள் மூடி அந்த உணவகத்தின் மெல்லிய இசையை ரசித்துக்கொண்டிருகிறாள். இப்படியாக, அமிர்தம் - நித்யா காதல் முறிகிறது.
இருபது வருடம் கழித்து, ஒரு நாடகத்தில் நித்யாவின் சாயல்கொண்ட, நித்யாவின் துறுதுறுப்புகொண்ட பானுவை, அமிர்தம் சந்திக்கிறான். அவனுக்கு நாடகம் பிடிக்கவில்லை; தன் மனைவிக்காக வந்தான். நாடகம் முடிந்து, பானுவை காரில் அவள் வீட்டில் விட நேர்கிறது. இங்கே ஆரம்பிகிறது நாவலில் வேகம். தீ பற்றிக்கொண்டு சர்ரென்று செல்கிறது.
பானுவின் அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். பானுவின் சிறுவயதிலேயே அவன் இறந்துவிடுகிறான். தன் பழைய காதலியின் சாயை கண்டு, பானுவிடம் பழக ஆரம்பிக்கிறான், அமிர்தம். நல்லவேளை, பானுவின் அம்மாதான் நித்யா என கதையைக் கொண்டு செல்லவில்லை.
தன் முதுமையை இளமையாக மாற்றும் யயாதியாக அமிர்தம் பானுவைப் பார்க்கிறான். தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை திலகம் தாங்கமுடியாமல் சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கிறாள்; அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். தன் மகள் மணமான ஒருவருடன் பழகுவதை பானுவின் அம்மா கண்டிக்கிறாள். அமிர்தம் தன் ரசனைக்கேற்ற துணையுடன் இல்லை என்று பரிதாபப்பட்டும், அவனை உள்ளுராக ஒரு தகப்பன் நிலையிலும் (father figure) வைத்து, பானு அவன் மேல் ஈடுபாடு கொள்கிறாள். இவர்களிடையே நடக்கும் எண்ண மோதல்கள்தான் இந்த நாவல்.
அமிர்தமின் பயம், தயக்கம், செய்து பாப்போம் என்ற தைரியம், குழப்பம் ஆகியவற்றை அழகாக சித்தரித்துள்ளார் இந்திரா பார்த்தசாரதி. வயது பற்றிய obsessionதான் பானு மீதான காதலுக்கும், திலகத்தின் மீதான வெறுப்புக்கும் காரணமென  கடைசியில் அமிர்தம் உணர்கிறான்.
முடிவு ஏற்றுக்கொள்ளும்படியானது. அமிர்தமும், திலகமும், பானுவும், பானுவின் அம்மாவும் அப்படிதான் செய்திருப்பார்கள். கடைசி வரியில் வரும் தொலைபேசி யாருடையது? பிரமையோ, திலகமோ, பானுவோ, பானுவின் அம்மாவோ என கேட்கிறார் முன்னுரையில் தி.ஜானிகிராமன். நான் அது திலகமின் அழைப்பு என்கிறேன்.
நாவல் முழுவதும் பகடி, நவீன சிந்தனை, ஆண் பெண் உறவு, எக்சிஸ்ட்டென்ஷலிச கணங்கள் ஆகியவை விரவிக்கிடக்கின்றன.
நிகழ்காலத்திலிருந்து, இறந்தகாலத்திற்கும், பின் திரும்பவும் நிகழ்காலத்திற்கும் ஓரிரு வரிகளில் சட்டென அனாயசமாக, குழப்பமில்லாமல் மாறுகிறார் இந்திரா பார்த்தசாரதி.