Friday, November 27, 2015

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - மதிப்புரை

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - சாரு நிவேதிதா







நகத்தை நறுவிசாக வெட்டடாதவனும், மணிக்கட்டின் கீழ் சாம்பார் வழிய வழிய சாப்பிடுபவனும் மனிதனே அல்ல என்று கருதுபவர்களுக்கு, subaltern வாழ்க்கையை முகத்தில் அறைந்துச் சொல்வதே இந்நாவல். சூர்யாவின் சிறுவயது தோழன் இப்போதும் மலம் அள்ளுகிறான். ஏன் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய் எனச் சூர்யா கேட்க, அவனைப் பீச்சந்துக்கு அழைத்துச் சென்று காமிக்கிறான். சூர்யா அருவருப்பில் வாந்தி எடுக்கிறான்.


தன்னை இரண்டு மணிக்கு வரச்சொல்லி, வந்தவனைக் கண்டுகொள்ளாமல், ஒரு தோழியிடம் அரைமணி நேரம் பேசிகொண்டிருக்கும் நண்பனுக்கு எழுதும் கடிதத்தில் சூர்யா, சக மனிதனையும் தன்னைப் போல் மதிப்பதே அடிப்படை நாகரிகம் என்று கூறுகிறான்.


கோ.கி.தமிழ்வீறு தன் சகாவைப் (peer) பார்த்து, சிறு வயதில் சுய இன்பம் செய்யக் கற்றுக் கொள்கிறான். ஒன்பது-பத்து வயதில், விந்து வெளிவரும்போது பயம் கொள்கிறான். யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என, காட்டுக் கோயிலுக்கும், ஊரில் உள்ள பெருமாள் கோயிலுக்கும் செல்ல ஆரம்பிக்கிறான். கோயில் அர்ச்சகர் அவன் உறுப்பைச் சுவைக்க, செய்வதறியாது உடன்படுகிறான். Child Sexual Abuse என்பது கிராமம், நகரம் என எங்கும் நீக்கமற நடந்து கொண்டு தான் இருக்கின்றது. செட்டியார், குருஜி, ஊருக்குப் புதிதாக வரும் வேசி, வேசியின் மகள் முதலியோர் மூலம் சாரு இளம்பதின் வயதினருக்குறிய (early teen) பாலியல் பிரச்சனைகள், குழப்பங்கள், ஆசைகள், கட்டுக்கதைகள் (misconceptions) ஆகியவற்றை ஆழமாக, அழகாகச் சொல்லுகிறார். 'அழியாத கோலங்கள்' போன்ற மிகச் சில படைப்புகளே இதைப் பற்றிப் பேசுகின்றன.


சூர்யாவின் உறவினர்களுள் சிலர், Incest, கள்ளக் காதல் என இருந்தாலும், அவர்கள் உறவில் ஒழுங்கான ஒழுங்கின்மையைக் (regularly irregular) (சீரான ஒழுங்கின்மையைக்) காண முடிகிறது. உதாரணமாக, வரதராஜூவின் வைப்பாட்டி கணவனிடம், சூர்யாவின் அவ்வாவும் அத்தையும் மரியாதையுடனே பேசுகின்றனர். ஆனால், ஆர்த்தியின் பள்ளிக்காதல்களிலும், கமலக்கண்ணனுடனான உறவிலும், ஒழுங்கின்மையான ஒழுங்கின்மையைத் (irregularly irregular) (சீரற்ற ஒழுங்கின்மையைத்) தான் காணமுடிகிறது. இதுவே, சூர்யாவின் கோபத்திற்குக் காரணம்.


மிஸ்ரா, தேநீருக்காகக் கையேந்துபவனிடம், 'பிச்சையெடுக்காதே, திருடு; அகப்பட்டு, அடித்தால் திருப்பியடி; சிறையில் தள்ளினால், வெளியே வந்து திரும்பத் திருடு' எனக் கூறுகிறான். தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதி சும்மாவா சொன்னான்.


தற்கொலை குறுங்கதைகள் சாந்தியின் ஆதித் தாயாக, நான் கிரணைப் பார்க்கிறேன்.

***

ஃபெப்ருவரி 6, 2014 அன்று முகநூலில் உள்ள சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் எழுதியது.

***