Tuesday, May 10, 2016

ஒரு பார்வையில் சென்னை நகரம் - மதிப்புரை

ஒரு பார்வையில் சென்னை நகரம் - கட்டுரைகள் - அசோகமித்திரன் - கவிதா பதிப்பகம். முதல் பதிப்பு 2002, மூன்றாம் பதிப்பு: 2015



சென்னையின் ஒவ்வொரு ஏரியா (அசோகமித்திரன் மொழியில் 'பேட்டை') பற்றியும் தனக்குள்ள தொடர்பு பற்றி அசோகமித்திரன் இந்த நூலில் எழுதியுள்ளார். அசோகமித்திரன் தி.நகர் வாசி.

தியாகராய நகர், மாம்பலம், மவுன்ட் ரோட், வேளச்சேரி, அம்பத்தூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், என ஒவ்வொரு பகுதி பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். அம்பத்தூர் பற்றி, அதன் நிறைய 'நகர்'கள் பற்றி, தெருக்களின் பெயர்கள் பற்றியெல்லாம் படிக்கும்போது, இவர் இந்த இடங்களில் எல்லாம்கூட சுற்றியிருக்கிறாரே என ஆச்சரியமாக உள்ளது.

இந்நூலில் காணும் சில வரலாற்றுத் துணுக்குகளும் ஏற்கனேவே அறிந்தவையாக இருந்தன. ஆனால், இந்தப் புத்தகத்தை ஒரு எழுத்தாளன் அவன் வாழும் நகரத்தின்மேல் கொண்ட பிரியத்தின்பால் எழுதிய பிரதி என்றுதான் கொள்ளவேண்டுமே தவிர, எஸ்.முத்தையாவின் Madras Rediscovered போன்று அரிய வரலாற்றுத் தகவல்கள் கொண்ட புத்தகமாக எதிர்பார்க்கக் கூடாது. மேலும் வரலாற்றை எழுதுவது ஒரு எழுத்தாளனின் வேலை அன்று.

அந்தக்கால திருவல்லிக்கேணி மெஸ்கள் எப்படி புது வாடிக்கையாளர்களைத் 'தேர்ந்தெடுப்பார்கள்' என்று அசோகமித்திரன் சுவாரசியமாக கூறியுள்ளார். புது வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் திருவல்லிக்கேணி மேன்சன்களில் தங்கி பிரெசிடென்சி அல்லது மெட்ராஸ் பல்கலை.யில் பயிலும் மாணவர்கள். அவர்கள் ஏப்பம் விடுகிறார்களா, மற்றவர்களுக்குத் தொந்தரவு தராமல் சாப்பிடுகிறார்களா என மூன்று நாட்கள் பார்த்த பிறகே, மெஸ் உரிமையாளர்கள் அவர்களுக்கு வார / மாத டோக்கன் தருகிறார்கள்.

அசோகமித்திரன் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் இந்நூல் உதவும். வீட்டின் நெருக்கடியில் உட்கார்ந்து எழுத முடியாமல், ஒரு நண்பரின் அறிவுரையின் பேரில், அசோகமித்திரன் தி.நகர் அகஸ்தியர் கோயிலுக்கு சென்று எழுத முயற்சிக்கிறார். அங்கும் இவருக்குச் சூழல் சரியாக இல்லாததால், வீடு திரும்பும் வழியில் நடேசன் பூங்காவில் உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கிறார். பதினைந்து ஆண்டுகள் அங்குதான் எழுதியதாகக் கூறுகிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும்கூட மெட்ராஸில் பெருமழை பெய்து, நகரம் வெள்ளக் காடாக இருந்தது என்று அசோகமித்திரன் கூறும்போது, நாமும் நம் ஆட்சியாளர்களும் இந்த நகரத்தை என்றுமே சரியாகப் பேணவில்லை என்ற எண்ணம் மேலிடுகிறது.

புத்தகத்தைப் படித்து முடிக்கும் முன்னே, முன்னட்டை பிரியத் தொடங்கிவிட்டது. கவிதா பதிப்பகம் புத்தகத்தை இன்னும் கொஞ்சம் அக்கறை எடுத்துப் பதிப்பிக்க வேண்டும்.

இணையம் மூலம் வாங்க: Wecanshopping