Thursday, April 14, 2016

க.நா.சு.வின் 'ஆட்கொல்லி' - மதிப்புரை

ஆட்கொல்லி - நாவல் - க.நா.சுப்ரமண்யம், முதல் பதிப்பு: 1956; தற்போதைய பதிப்பு: 2014, விருட்சம் வெளியீடு.


                                                                 க.நா.சு.

பணக்காரன் தன் உற்றார் உறவினரை மதிப்பதில்லை. உற்றார் உறவினரும் இதன் காரணமாக அவனிடம் விலகியே உள்ளனர். எனவே, பணம் ஒரு ஆட்கொல்லி என்கிறார் க.நா.சுப்ரமண்யம்.

ராஜா, தன் பள்ளிக் காலத்தில் சில வருடங்கள் அவன் மாமா வேங்கடாசலம் வீட்டில் தங்கிப் படிக்கிறான். மாமா அரசுப் பள்ளி ஆசிரியர். மாதம் தொண்ணூற்றி மூணே முக்கால் ரூபாய் சம்பளம். ஆனால், குறுகிய காலத்திலேயே வேங்கடாசலம் லட்சாதிபதி ஆகிவிடுகிறார். ராஜாவுக்கு இது எப்படி என்றே புரியவில்லை. வெகுநாட்கள் கழித்துத்தான் ராஜாவுக்கு தெரிகிறது, வேங்கடாசலம் வட்டிக்குப் பணம் கொடுப்பதை உபதொழிலாகக் கொண்டுள்ளார், என்று.

கடனைத் திருப்பித் தர முடியாதவர்களிடம் இருந்து நிலம், வீடு முதலியவற்றை அபகரிக்கிறார் வேங்கடாசலம். இதெல்லாம் பாபம் இல்லையா மாமி என்று ராஜா, தன் அத்தை ஜானகியிடம் கேட்கிறான். அதற்கு ஜானகி, நாம் ஒன்றும் அடுத்தவர் சொத்தைப் பிடுங்கிக்கொள்ளவில்லை; நமக்கு வர வேண்டியதைத்தான் வாங்கிக்கொள்கிறோம்; அடுத்தவர் காசு ஒரு ருபாய்கூட நமக்கு வேண்டாம்; அதே நேரம் நம் காசு ஒரு ருபாயைக்கூட அடுத்தவரிடம் ஏமாறக்கூடாது, என்கிறாள்.

மேலோட்டமாகப் பார்த்தால், அவள் சொல்வது சரி என்று தோன்றும். ஆனால், வட்டிக்குப் பணம் தருவதே பாபம் இல்லையா என்று கேட்கிறார் க.நா.சு.

வறுமையில் இருக்கும் தன் தங்கை உதவி கேட்டு வந்தபோதுகூட அவளுக்கு உதவாமல், திரும்பி அனுப்பிவிடுகிறார் வேங்கடாச்சலம்.

ராஜா இரண்டு வருடங்கள் தன் மாமா வீட்டில் தங்கிப் படித்ததற்கு, ராஜாவின் அப்பாவிடம்  ஐநூறு ரூபாய் கேட்கிறார் வேங்கடாச்சலம். சாப்பாடு, தங்க இடம் கொடுத்தது ஆகிவற்றுக்கு அவர் காசு கேட்கவில்லை. வெளியில் போனால், சிறுவனுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவது, பேனா பென்சில் வாங்கித் தந்தது முதலிய செலவுகளை ஒவ்வொன்றாய் கணக்கு புத்தகத்தில் எழுதி, கணக்கு காண்பிக்கிறார் வேங்கடாசலம். மருமகனுக்கு செலவு செய்ததற்கு கணக்கு பார்ப்பதா என்று, காசு தர மறுக்கிறார் ராஜாவின் அப்பா.

மாமா வீட்டில் தினசரி உணவு - ரசம், வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம். ஒரு நாள் என்றால் பரவாயில்லை. வருடம் முழுவதும் இதுவேதான். இந்த உணவு பத்தாமல், உணவு விடுதிகளில் சாப்பிடுகிறான் ராஜா. முக்கியமான விஷயம், மாமா - மாமிக்கும் இதே உணவுதான்.

வேங்கடாச்சலம்-ஜானகி தம்பதியை முழுக்கவும் கெட்டவர்களாக க.நா.சு. காட்டவில்லை. கறுப்பு - வெள்ளைக்கு நடுவில் சாம்பல் நிறத்தில் அவர்களை சித்தரித்துள்ளார் க.நா.சு. இதுவே, இந்நாவலின் பலம்.

பணம் பற்றி ராஜா கூறும் வியாக்கியானங்கள் சத்தியமானவை. பாவ்லோ கொய்லோ நாவல்களில்தான் இப்படி தத்துவம் நிறையவும் கதை கம்மியாகவும் இருக்கும். நாம் படிப்பது அபுனைவா, இல்லை புனைவா என்று சந்தேகம் வரும். ஆனால், படிக்க சுவாரசியாமாக இருக்கும். உதாரணம்: எலெவன் மினிட்ஸ், தி அல்கெமிஸ்ட். பழுப்பு நிறப் பக்கங்களில், க.நா.சு.வை சாரு நிவேதிதா பாவ்லோ கொய்லோவுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

ஒரு சோகக்கதையில் அழுகை வரவைப்பது இலக்கியம் அல்ல, அனுதாபம் தருவிப்பதுதான் இலக்கியம்; இது ஒரு சில ஜாம்பவான்களுக்கே கைகூடியது, என்று முன்னுரையில் சொல்கிறார் க,நா.சு.

சாரு நிவேதிதாவின் ராஸ லீலா, கண்ணாயிரம் பெருமாள் என்ற குமாஸ்தா அஞ்சல் துறையில் படும் இன்னல்களையும் காமமே இல்லாத அவனது பாலியல் வறட்சியையும்தான் பேசுகிறது. முழுக்க சோகம். ஆனால், ஒவ்வொரு பக்கமும் பகடி. படிக்க படிக்க இன்பம். க.நா.சு., ராஸ லீலாவைப் படித்திருந்தால், சாரு நிவேதிதாவை ஜாம்பாவான்கள் பட்டியலில் சேர்த்திருப்பார்.

***

இணையம் மூலம் வாங்க: 'Wecanshopping' குஹனை, தொலைப்பேசி / வாட்ஸ்-அப் – +91 90032 67399 / 9940448599 மூலம் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கலாம்.

விருட்சம் முகவரி:

நவீன விருட்சம், புதிய எண் 16, ராகவன் காலனி Flat F3, Seethalakshmi Apartments, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033