Tuesday, December 27, 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

கிளிக்காவியம் ('தித்திக்காதே' தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்

"நதிகள் உடைந்து
எனது நகரம் மூழ்கத் தொடங்கிய நாளில்
மக்கள் மேட்டு நிலங்களை நோக்கி
பைத்தியம் பிடித்தவர்களாக ஓடினார்கள்
யாருக்கும் உணவில்லை
தண்ணீர் இல்லை
கடைகள் மூடப்பட்டுவிட்டன
வளர்ப்பு நாய்களின் செத்த உடல்கள்
நீரில் மிதந்து சென்றன

நான் என் கிளிகளுக்கு
பழங்கள் கேட்டு
கொட்டுகிற மழையில்
தெருத்தெருவாக அலைந்தேன்
மூடப்பட்ட கடைகளின் கதவுகளை
கோபத்துடன் எட்டி உதைத்தேன்
ஒரு நகரத்தின் குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருந்தபோது
நான் என் கிளிகளுக்கு
உணவு கொடுங்கள் என்று
நிர்பந்தித்தேன்."

இந்த வரிகளை சாரு நிவேதிதா வாசிக்கும்போது இடையில் சொல்கிறார்: "நானும் நிர்பந்திதேன், என் நாய்களுக்காக".




முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த அன்று நகரத்தில் எங்கும் கடைகள் திறந்திருக்கவில்லை. சரி, எங்குமே கடைகள் இல்லையெனில் செல்வகுமார், பிரபு காளிதாஸ், முத்துக்குமார் வீடுகளுக்கோ, மருத்துவ நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றுவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். சாரு காலையில் தொலைபேசியில் கேட்டார், எங்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று . ஏதேனும் கடை திறந்திருக்கும், தேட வேண்டும் என்று கூறினேன். செல்வகுமாரும் தொலைபேசியில் கூப்பிட்டு, எங்கும் கடை இல்லையெனில் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். பேருந்துகள் ஓடவில்லை.

பிஸ்கட், பழங்கள் ஆகியவை ஒரு வேளைக்குத்தான் உதவும் என ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தில் உணர்திருந்தேன் - காவிரி பிரச்னை பந்த் அன்று.

முக்கால் மணி நேரம் தேடியும் ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செல்வா வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் கோயில் அருகில் கோயில் பணியாளர்கள் ஓரிருவர் பார்சல் பேப்பரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கடை ஏதேனும் திறந்திருக்கிறதா என்று கேட்டேன். அருகில் உள்ள கடையை சொல்லி, அங்கு பாதி ஷட்டர் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றார்கள். அங்கு சென்று பார்சல் வாங்கிக்கொண்டேன். மட்டமான உணவு. வேறு வழி இல்லை. மூன்று வேளையும் அதேபோல்.

க.நா.சு. எழுதியுள்ளார், பேச்சிலர்களுக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை, என்று.

பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ, ப்ளாக்கி, ப்ரௌனி, வொயிட்டி ஆகிய சாருவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்று மீன் தீர்ந்துவிட்டது. சாரு பிரபுவை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வந்து போக முடியுமா என்று கேட்டிருக்கிறார். பிரபு வந்தவுடன் அவருடன் மோட்டார் பைக்கில் பட்டினம்பாக்கம் மீன் சந்தைக்கு சென்று நாய்களுக்கும் பூனைகளுக்கும் தேவையான அளவு மீன் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாரு பிரபுவிடம் சொல்லியுள்ளார், ஸ்ரீராம் இன்று எங்கு சாப்பிடுவார் என்று தெரியவில்லையே, என்று. நான் வேண்டுமானால் உணவை டிஃபன் கேரியரில் போட்டு ஸ்ரீராம் வீட்டுக்குக் கொண்டு செல்லவா என்று பிரபு கேட்டுள்ளார். (என் வீட்டுக்கு வர கடற்கரை சாலையைத் தாண்டி வர வேண்டும்; அங்குதான் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் நடக்க இருந்தது.) "அவர் பிஸ்கட் பழங்கள் சாப்பிட்டு manage பண்ணிக்குவாரு. நீங்க அந்த வழியாகப் போயி சிக்கிக்காதீங்க," என்று சாரு சொல்லியுள்ளார். மதியம் மூன்று மணிக்கு சாரு தொலைபேசியில் அழைத்தார், "ஸ்ரீராம், எங்க சாப்பிட்டீங்க?"

சொன்னேன். ஆசுவாசமாக சிரித்தார்.

அடுத்த நாள், தினமும் சாப்பிடும் உணவகத்தில் அதன் உரிமையாளர் கேட்டார், "நேத்து வந்திருக்கலாம்ல சார்."

***

அடுத்த ஊரடங்கு நடப்பதற்கான அறிகுறிகள் சென்ற வாரம் அரங்கேறின. (நல்ல வேளை நடக்கவில்லை.) கூச்சப்படாமல் உணவக உரிமையாளரிடம் சொன்னேன், நாளை வருகிறேன்; உங்கள் உணவை எனக்கும் தாருங்கள் என்று. வீட்டுக்கே கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீங்க சார் என்றார்.

Wednesday, December 14, 2016

சாரு நிவேதிதா என்ற வசீகரன்

விசாரணை 'பாராட்டு விழா' கூட்டத்தில், அந்தப் பெண் தொகுப்பாளர், "வசீகரமான தோற்றம் கொண்ட சாரு நிவேதிதாவை பேச அழைக்கிறேன்," என்று சொன்னார். ஆனால், ஸ்ருதி டிவியும் வேறு எந்த YouTube சேனலும் அதைப் பதிவு செய்யவில்லை. (அந்த உரையை இது வரை  அனைத்து YouTube சேனல்களிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர்.)

"நாப்பது வருஷமா உடலை பரமாரிச்சதோட பலன் இது. Pedicure, manicure, facial, jogging, walking, yoga அப்படின்னு பார்த்து பார்த்து மெனக்கெட்டதோட பலன். யாரும் இதை ஷூட் பண்ணாம விட்டுட்டாங்களே," என்று சாரு அப்போது வருத்தப்பட்டார்.

(படிக்கவும்: எக்ஸைலில்  'பெருந்தேவி சொன்ன பாம்பு கதை', தில்லி கதை மற்றும் எக்சிஸ்டென்ஷலிசமும் ஃபேன்சி பனியனும்)

***

மதியம் ஸைத்தூனில் (எக்ஸ்ப்ரஸ் அவென்யூ எதிரில்) சாப்பிட்டுவிட்டு, நானும் சாருவும் ஆட்டோ பிடிக்க நின்றிருந்தோம்.

(EA வாசலில் நின்றுகொண்டிருக்கும் ஆட்டோவை கேட்டால், தாறுமாறாகக் கேட்பார்கள். மீட்டர் போட மாட்டார்கள். ஸைத்தூனில் இருந்து சாரு வீட்டுக்கு செல்ல, மீட்டர் போட்டால், அறுபது ருபாய் ஆகும்.)

இனி verbatim. (நடந்த உரையாடல் அப்படியே)

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்று வந்துகொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி சாரு கேட்டார்.

"எரநூறு ரூபா சார்."

"ஏன், முன்னூறு ரூபா கேளுங்களேன்," என்று சொல்லிவிட்டு, வேறு ஆட்டோ பார்க்க ஆரம்பித்தார்.

நான் ஆட்டோ ஓட்டுனரிடம், "கை கொடுங்க," என்று சொல்லி, கைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

"அப்பு ஸ்ட்ரீட் போகணும்," என்றேன் நான். "மீட்டருக்கு மேல் இருபது ரூபா," என்று சாருவும் சொன்னார். சரி என்றதும் அமர்ந்தோம்.

"எரநூறு ரூவா கேட்குறான். அதான் கைக் கொடுத்துட்டு வந்தேன், சாரு."

"எப்படி இருக்கானுவ பாருங்க."

"நம்ம ரெண்டு பேருக்கும் கனவான் look இருக்குறதால, அப்படி கேக்குறானுங்க, சாரு. எவ்வளவு கேட்டாலும் தருவாங்கன்னு நம்புறாங்க."

"நம்மல பார்த்தா, மூனா பூனா மாதிரியாவா இருக்கு? நான் இளைஞனா இருந்திருந்தா, அவன் மூக்குலயே குத்தியிருப்பேன்."

(கனவான் தோற்றம் = மூனா பூனா. ROFL )

ஆட்டோ ஓட்டுனர் சொன்னார், "இப்பவும் நீங்க இளைஞன் மாதிரிதான் இருக்கீங்க, சாமி. என்ன தலதான் நரைச்சிருக்கு. அதுவும் இப்ப ஒரு ஸ்டைல்தான்."

"சாரு, இது second time. மிகப் பெரிய reward. நாப்பது வருஷமா உங்க உடம்பை ஆராதிக்கிறேன்ன்னு சொன்னீங்களே. அதுக்கான பலன்."

சாரு தனக்கே உரிய அந்த அழகான சிரிப்பை உதிர்த்தார்.


Thursday, November 3, 2016

Tag Centre சர்ச்சை

TAG சென்டர் நிகழ்வு பற்றி விமர்சகர் வட்டத்தினர் எழுதிய பதிவை நண்பர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள்.


மாமல்லனும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆனது எனக் கேட்டார். அது பற்றிய சிறு விளக்கமே இந்தப் பதிவு.


மாதத்தின் கடைசிச் செவ்வாயில் TAG-இல் ஒரு புத்தக விமர்சனக் கூட்டத்தை 'தமிழ் புத்தக நண்பர்கள்' என்ற அமைப்பு கடந்த இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறது. TAG-இல் மொத்த இருக்கைகள் நூற்றைம்பது. 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவில் இருந்து எப்பொழுதும் நூறு பேர் வந்துவிடுகின்றனர் என்று அறிகிறேன்.


அக்டோபர் முதல் வாரமே அழகியசிங்கர் என்னைத் தொடர்புகொண்டு நிகழ்வுக்கு சாரு நிவேதிதாவின் வாசகர்கள் எத்தனை பேர் வருவார்கள் எனக் கேட்டிருந்தார். ஐம்பது பேர் வருவார்கள் எனச் சொல்லியிருந்தேன். அவர் இந்தத் தகவலை 'தமிழ் புத்தக நண்பர்கள்' குழுவின் நிர்வாகிகளிடம் தெரிவித்து, அதற்கேற்ப நூற்றைம்பது பேருக்கு உணவு தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்துள்ளனர்.


விழா அன்று ஐந்து மணிக்கே அந்திமழை, கிழக்கு, உயிர்மை பதிப்பக நண்பர்கள் அரங்கு வாயிலில் புத்தக விற்பனையைத் தொடங்கிவிட்டனர். ஐந்தே காலுக்கு பிரபு காளிதாஸ், சாய் ராஜேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்ட சாரு வாசகர் வட்ட நண்பர்கள் அரங்கிற்கு சென்றுவிட்டனர்.


கூட்டம் நடைபெறுவது முதல் மாடியில். உணவு இரண்டாம் மாடியில். நான் ஐந்தரைக்குச் சென்றேன். பெரும்பாலான இலக்கியக் கூட்டங்களில் நடைபெறுவது போல், கீழ்த்தளத்தில், ஒரு நோட்டு புத்தகத்தில் புதிதாக வருபவர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரிகளை வாங்கிக் கொண்டார்கள். நண்பர்களுடன் சென்று இரண்டாம் மாடியில் வழங்கப்பட்ட சிற்றுண்டியை அருந்திவிட்டு, முதல் தளத்திற்கு வந்தோம். விழா மிகச் சரியாக 6:29-க்கு ஆரம்பமானது. சாரு நிவேதிதா 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்தார்.


சுமார் ஆறு மணி வாக்கில், புகைப்பட நிபுணர் பிரபு ராமகிருஷ்ணன் முதல் தளத்திற்குள் கோபமாக நுழைந்தார். தன்னை உள்ளே விடவில்லை எனவும் விழா அமைப்பாளர்கள் தன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசினர் என்றும் என்னிடம் முறையிட்டார். நானும் முத்துக்குமாரும் கீழே சென்றோம். பிரபு ராமகிருஷ்ணன் சொன்னது போல் யாரும் எங்களை எதுவும் கேட்கவில்லை. சரி, பார்கிங்-இல் ஏதேனும் பிரச்சினை என்று வெளியே சென்று பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தோம். TAG சாரியும் அவரது உதவியாளரும் நோட்டு புத்தகம் இருந்த இடத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். சாரியின் உதவியாளர், உங்களிடம் அழைப்பிதழ் உள்ளதா எனக் கேட்டார். ஏற்கனவே, நோட்டில் பதிவுசெய்துவிட்டோம் என்று சொன்னேன். "அது முக்கியமில்லை, உங்களுக்கு இந்த நிகழ்வு பற்றி எப்படித் தெரியும்?" எனக் கேட்டார். "நாங்கள் சாரு நிவேதிதாவின் வாசகர்கள் மற்றும் நண்பர்கள்; சாருவின் வலைப்பதிவைப் பார்த்து நாங்கள் வந்துள்ளோம்," என்றேன். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். 

என்னதான் பிரச்சினை என்று பொறுமையாகக் கேட்டேன். "எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்ற உண்மையை சாரியின் உதவியாளர் கக்கினார்.


"We have come all the way to listen to Charu's speech and not for the food. Food is immaterial to us. We feel insulted," என்று கோபமாக சாரியிடம் கத்தினேன். உணவுதான் பிரச்சினை என்றால், இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுப்புங்கள்; இரண்டாம் தளத்திற்கு அனுப்ப வேண்டாம் என்று கோரினேன். அவர் என்னை சமாதானப்படுத்தி, இனி வரும் வாசகர்கள் அனைவரையும் முதல் தளத்திற்கு அனுமதிப்பதாக உறுதியளித்தார்.


பிரபு ராமகிருஷ்ணனிடம் முத்துக்குமார் விஷயத்தைச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தினார். 6:25-க்கு முதல் தளத்திற்கு வந்த சாரு நிவேதிதாவுக்கு இது எதுவும் தெரியாது. He was ignorant to all these nonsense. விழா ஆரம்பமாவாதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன் சாரி சாருவிடம், "உங்கள் blog-இல் நீங்கள் இந்த நிகழ்வு பற்றி எழுதியிருக்கக் கூடாது; எங்கள் உறுப்பினர்களுக்கு உணவு போதவில்லை," என்று சொல்லியிருக்கிறார்.


அரங்கு நிறைந்த கூட்டம். Extra chairs போட்டார்கள். ரவி தமிழ்வாணன் மேடையிலேயே, இவ்வளவு இளைஞர்கள் இங்குக் கூடி நான் பார்த்ததில்லை எனக் கூறினார். இந்த மகிழ்ச்சியான சூழலைக் கெடுக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால்தான் தான் அவமானப் படுத்தப் பட்டாலும், இது குறித்து சாரு நிவேதிதா தன் உரையில் எதுவும் சொல்லவில்லை.


எட்டு மணிக்குக் கூட்டம் முடிந்ததும், புத்தகங்களில் கையெழுத்து போட்டுவிட்டு, 8:15-க்கெல்லாம் சாரு நிவேதிதா கிளம்பிவிட்டார்.


அடுத்த நாள் காலை, ஸ்ருதி டிவி கபிலன் தொலைபேசியில் பேசினார். முதல் நாள் மாலை ஆறரைக்கு அவர் வந்த பொழுது Gate பூட்டியிருந்ததாகவும் சுமார் முப்பது பேரை உள்ளே விடவில்லை என்றும் கூறினார். கபிலன் பெரும் சண்டை போட்டு, மேலே வந்துள்ளார்.


சாரி எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளார். முதல் நாள் மாலை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சாரு நிவேதிதாவிடம் விலாவரியாகத் தொலைபேசியில் கூறினேன். தன்னையும் சாரி அவமானப்படுத்தியதாக சாரு நிவேதிதா கூறினார். தான் அவமானப்படுத்தப்பட்டபோது தாங்கிக்கொண்ட அவர், தன் நண்பர்கள் அவமானப்படுத்தப் பட்டதை அறிந்து மனம் வெம்பினார். அன்று மாலையே காட்டமாக ஒரு பதிவு போட்டார்.

https://charuonline.com/blog/?p=5236


அதுதான் மேலே உள்ள பதிவு.


மேலும், பிரபு ராமகிருஷ்ணன் தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி தன் நண்பர்கள் குழுவில் பதிவிடுகிறார். அதை நண்பர் ஒருவர் சாரு நிவேதிதாவுக்கு அனுப்பி வைக்கிறார். மேலே உள்ள பதிவில் அந்தக் கடிதம் உள்ளது.


சரி, சாரு நிவேதிதா தன் வலைத்தளத்தில் இந்த நிகழ்வு பற்றி எழுதியது தவறா என்று கேட்டால், எஸ். ராமகிருஷ்ணன் ஃபெப்ருவரி 2016-இல் எழுதிய பதிவைப் பார்க்கவும். 

http://www.sramakrishnan.com/?p=5216

எஸ்.ராமகிருஷ்ணன்:

ஃபெப்ருவரி 23ம் தேதி மாலை  5:45 மணிக்கு எனது சஞ்சாரம் நாவல் குறித்த விமர்சனக்கூட்டம் நடைபெற உள்ளது.


Date:   Tuesday, 23rd February 2016


Time:   5.45 p.m. to 8.15 p.m.


Venue: Tag Centre, New No. 69, T.T.K.Rd., Alwarpet, (Opp. Narada Gana Sabha), Chennai 600018


Book of the Month:   `Sancharam` by S. Ramakrishnan


Reviewer:   Smt. Chithra Balasubramanian


Programme:


5.45 p.m. to 6.30 p.m.  High Tea


6.30 p.m. to 6.45 p.m.  Prayer song followed by Welcome by Ravi Tamizhvanan


6.45 p.m. to 6.50 p.m.   Presentation of the `Best Reviewer Award` for 2015 to Smt. Kanthalakshmi Chandramouli by Shri N. Goplaswami, former Chief Election Commissioner


6.50 p.m. to 7.05 p.m.  Felicitation talk by Shri N. Gopalaswami


7.05 p.m. to 7.35 p.m.  Review of the book `Sancharam` by Smt Chithra Balasubramanian


7.35 p.m. to 8.05 p.m.  Author`s response followed by answers to selected


Questions from the audience by the author Shri S. Ramakrishnan


8.05 p.m.          Vote of thanks by Charukesi


***


இருநூறு பேர் வந்துவிட்டார்கள் என்றால், விழா அமைப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? வாசகர்களை இரண்டாம் தளத்திற்கு அனுப்பாமல், முதல் தளத்திற்கு மட்டும் அனுமதித்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வாசகர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது.


பின்குறிப்பு:


மொத்தம் நூற்றைம்பது பேருக்கான உணவு தயார் செய்யப்பட்டது. அதையும் தாண்டி வாசகர்கள் வந்தால், விழா அமைப்பாளர்கள் இப்படி இங்கீதம் இன்றி நடந்து கொள்ளலாமா? முதல் தளத்திற்கு மட்டும் வாசகர்களை அனுமதித்து இருக்கலாமே? சாரியின் தொனி எங்களை மிகவும் எரிச்சலூட்டியது. ஒரு வாதத்திற்கு, யாரையும் உள்ளே விடாமல் இருந்தால் கூட, அதைச் சொல்வதற்கு ஒரு முறை இருக்கிறது அல்லவா? அதுதான் இங்கே பிரச்சினை.


***