Showing posts with label பிரபு காளிதாஸ். Show all posts
Showing posts with label பிரபு காளிதாஸ். Show all posts

Tuesday, December 27, 2016

அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்!

கிளிக்காவியம் ('தித்திக்காதே' தொகுப்பு) - மனுஷ்ய புத்திரன்

"நதிகள் உடைந்து
எனது நகரம் மூழ்கத் தொடங்கிய நாளில்
மக்கள் மேட்டு நிலங்களை நோக்கி
பைத்தியம் பிடித்தவர்களாக ஓடினார்கள்
யாருக்கும் உணவில்லை
தண்ணீர் இல்லை
கடைகள் மூடப்பட்டுவிட்டன
வளர்ப்பு நாய்களின் செத்த உடல்கள்
நீரில் மிதந்து சென்றன

நான் என் கிளிகளுக்கு
பழங்கள் கேட்டு
கொட்டுகிற மழையில்
தெருத்தெருவாக அலைந்தேன்
மூடப்பட்ட கடைகளின் கதவுகளை
கோபத்துடன் எட்டி உதைத்தேன்
ஒரு நகரத்தின் குழந்தைகள்
பசியோடு அழுதுகொண்டிருந்தபோது
நான் என் கிளிகளுக்கு
உணவு கொடுங்கள் என்று
நிர்பந்தித்தேன்."

இந்த வரிகளை சாரு நிவேதிதா வாசிக்கும்போது இடையில் சொல்கிறார்: "நானும் நிர்பந்திதேன், என் நாய்களுக்காக".




முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா இறந்த அன்று நகரத்தில் எங்கும் கடைகள் திறந்திருக்கவில்லை. சரி, எங்குமே கடைகள் இல்லையெனில் செல்வகுமார், பிரபு காளிதாஸ், முத்துக்குமார் வீடுகளுக்கோ, மருத்துவ நண்பர்கள் வீடுகளுக்கோ சென்றுவிடலாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். சாரு காலையில் தொலைபேசியில் கேட்டார், எங்கு சாப்பிடப் போகிறீர்கள் என்று . ஏதேனும் கடை திறந்திருக்கும், தேட வேண்டும் என்று கூறினேன். செல்வகுமாரும் தொலைபேசியில் கூப்பிட்டு, எங்கும் கடை இல்லையெனில் வீட்டுக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தார். பேருந்துகள் ஓடவில்லை.

பிஸ்கட், பழங்கள் ஆகியவை ஒரு வேளைக்குத்தான் உதவும் என ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தில் உணர்திருந்தேன் - காவிரி பிரச்னை பந்த் அன்று.

முக்கால் மணி நேரம் தேடியும் ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செல்வா வீட்டுக்குப் போக ஆட்டோ பிடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது, பிரதான சாலையில் கோயில் அருகில் கோயில் பணியாளர்கள் ஓரிருவர் பார்சல் பேப்பரில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கடை ஏதேனும் திறந்திருக்கிறதா என்று கேட்டேன். அருகில் உள்ள கடையை சொல்லி, அங்கு பாதி ஷட்டர் போட்டு விற்றுக்கொண்டிருக்கின்றனர் என்றார்கள். அங்கு சென்று பார்சல் வாங்கிக்கொண்டேன். மட்டமான உணவு. வேறு வழி இல்லை. மூன்று வேளையும் அதேபோல்.

க.நா.சு. எழுதியுள்ளார், பேச்சிலர்களுக்கு ஒரு நாள் என்பது மூன்று வேளை, என்று.

பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ, ப்ளாக்கி, ப்ரௌனி, வொயிட்டி ஆகிய சாருவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அன்று மீன் தீர்ந்துவிட்டது. சாரு பிரபுவை தொலைபேசியில் அழைத்து வீட்டுக்கு வந்து போக முடியுமா என்று கேட்டிருக்கிறார். பிரபு வந்தவுடன் அவருடன் மோட்டார் பைக்கில் பட்டினம்பாக்கம் மீன் சந்தைக்கு சென்று நாய்களுக்கும் பூனைகளுக்கும் தேவையான அளவு மீன் வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் சாரு பிரபுவிடம் சொல்லியுள்ளார், ஸ்ரீராம் இன்று எங்கு சாப்பிடுவார் என்று தெரியவில்லையே, என்று. நான் வேண்டுமானால் உணவை டிஃபன் கேரியரில் போட்டு ஸ்ரீராம் வீட்டுக்குக் கொண்டு செல்லவா என்று பிரபு கேட்டுள்ளார். (என் வீட்டுக்கு வர கடற்கரை சாலையைத் தாண்டி வர வேண்டும்; அங்குதான் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் நடக்க இருந்தது.) "அவர் பிஸ்கட் பழங்கள் சாப்பிட்டு manage பண்ணிக்குவாரு. நீங்க அந்த வழியாகப் போயி சிக்கிக்காதீங்க," என்று சாரு சொல்லியுள்ளார். மதியம் மூன்று மணிக்கு சாரு தொலைபேசியில் அழைத்தார், "ஸ்ரீராம், எங்க சாப்பிட்டீங்க?"

சொன்னேன். ஆசுவாசமாக சிரித்தார்.

அடுத்த நாள், தினமும் சாப்பிடும் உணவகத்தில் அதன் உரிமையாளர் கேட்டார், "நேத்து வந்திருக்கலாம்ல சார்."

***

அடுத்த ஊரடங்கு நடப்பதற்கான அறிகுறிகள் சென்ற வாரம் அரங்கேறின. (நல்ல வேளை நடக்கவில்லை.) கூச்சப்படாமல் உணவக உரிமையாளரிடம் சொன்னேன், நாளை வருகிறேன்; உங்கள் உணவை எனக்கும் தாருங்கள் என்று. வீட்டுக்கே கொடுத்து விடுகிறேன். கவலைப் படாதீங்க சார் என்றார்.

Thursday, April 21, 2016

குறைந்த ஒளியில் - விமர்சனம்

குறைந்த ஒளியில் - குறுங்கட்டுரைகள் - பிரபு காளிதாஸ், உயிர்மை வெளியீடு, முதல் பதிப்பு - 2016



பிரபு காளிதாஸின் முகநூல் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். டாம் அண்ட் ஜெர்ரியில், இவர் ஜெர்ரி. டாம், என்ன கேமரா வைத்திருகிறாய் எனக் கேட்கும் 'நண்பர்கள்', பண பாக்கி வைக்கும் வாடிக்கையாளர்கள், கல்யாணத் தரகு இணையதளங்கள், என எண்ணற்ற மனிதர்கள். தான் அடிவாங்கியதை சுவாரசியமாக, பகடி கலந்து சொல்லியிருக்கிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைகளாக வந்திருக்க வேண்டியவை. 'ராணி பேரடைஸ்', 'சொம்மா', 'சிலோன் பரோட்டாவும் முட்டைக் கறியும்', 'பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது', 'பேச வேண்டும்', 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'இருபது பர்சண்ட் குடுகன்னும்மா..' ஆகிய கட்டுரைகளில் சிறுகதைக்கான கணங்கள் இருந்தன. இவற்றை, கொஞ்சம் விரிவாக்கி, செறிவாக்கி எழுதினால், நல்ல சிறுகதைகளாக உருமாறும்.

'என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு', 'சாகும் வரை விடமாடார்கள்' ஆகியவை நல்ல கட்டுரைகள்.

சில கட்டுரைகள் படிக்க படிக்க சிரிப்பு. உதாரணம்: 'ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?', 'பீஸ்', 'போலீஸ் நாய்', 'நம்பிக்கை இல்லையா?'

'உயிரில் கலந்த எழுத்து' கட்டுரையின் மொழி நன்றாக இருந்தது.

'முடியுமா?' என்று பத்து வரிகளில் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது.

'வெளித்தோற்றம்' கட்டுரையில் மேல்தட்டு மனிதர்கள் பற்றிய பிரபுவின் விமர்சனம் சரி. ஆனால் அதை இன்னும் முதிர்ச்சியுடன் எழுதியிருக்க வேண்டும். பணக்காரன் கெட்டவன், ஏழை நல்லவன், எனப் பொருள்படும்படி அந்தக் கட்டுரை உள்ளது. ஆனால், பிரபு அப்படி நினைப்பவர் இல்லை. இந்தப் பிரச்சனையை 'கிடைச்சா வாங்கித் தர்றோம்', 'என்னடா வேணும்?' கட்டுரைகளில் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.

'பிஹாரிகள்' கட்டுரை இந்தத் தொகுப்பில் தேவையில்லாதது. வெறும் தகவல் மட்டுமே உள்ளது. ஒரு கட்டுரையில் ஒரு முற்றுபெற்ற தன்மை இருக்கவேண்டும். அது மற்ற கட்டுரைகளில் உள்ளது. இன்னும் விரிவாக்கி எழுதப்படவேண்டிய கட்டுரை அது.

'கிழியும் தருணம்' கட்டுரையிலும் ஒன்றுமே இல்லை. கட்டுரைக்கான கணங்களோ, சிறுகதைக்கான கணங்களோ இல்லாத குறிப்பு அது. தொகுப்பில் பிடிக்காத இரண்டாவது கட்டுரை இது.

மூன்று கட்டுரைகளில் சாருவின் உத்தியான ஒரே வார்த்தையை தொடர்ச்சியாக அரைப் பக்கத்துக்கு எழுதுவதை பிரபு கையாண்டிருக்கிறார். இரண்டு கட்டுரைகளில் அது பொருந்துகிறது. ஒரு கட்டுரையில் 'ஓடி, ஓடி...' என தொடர்ச்சியாக வருகிறது. அது பொருந்தவில்லை. சாருவின் எழுத்தின் பாதிப்பில் எழுதுவது வேறு. சாருவை நகல் எடுப்பது வேறு. அந்த ஓரிடத்தில் மட்டும், பிரபு சாருவை நகலெடுப்பதாகத் தோன்றியது.

அடுத்தப் பதிப்ப்பில் Index-உம், கட்டுரை வெளியான தேதியும், குறிப்புகளுக்கான கடைசி இரண்டு பக்கங்களும் இடம் பெற வேண்டும்.

பிரபு, தன் அடுத்த புத்தகத்தை வேண்டுமானால் குறுங்கட்டுரைகள் தொகுப்பாகப் போடலாம். அதற்கு அடுத்த புத்தகங்கள் இன்னும் விரிவாக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புகளாகவும், சிறுகதைகளாகவும் இருக்க வேண்டும் என அன்புக் கோரிக்கை வைக்கிறேன்.

இணையம் மூலம் வாங்க: bit.ly/1Sdf2i3