Monday, February 1, 2016

சிறுதெய்வங்கள்

புகைப்படம் நன்றி: விக்கிமீடியா காம்மன்ஸ்


குறுக்குத்துறைக்குப் போய்விட்டுப் போகலாம் சாரு, என்றேன். சரி என்றார். ஒரு கருத்தரங்கிற்காக ஆறு மாதங்கள் முன் நெல்லை சென்றிருந்தோம். தாமிரபரணியைப் பார்த்தவுடனே, "நான் இந்தக் கோவிலுக்கு ஏற்கனவே வந்திருக்கேனே," என்று 
சாரு சொன்னார். இருபது வருடங்கள் முன் வேலை பிடிக்காமல், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அடிக்கடி திருநெல்வேலி வந்ததாகவும் குறுக்குத்துறையில் அன்றாடும் நீச்சலடித்ததாகவும் சாரு சொன்னார்.

காலை, ரயில் கோவில்பட்டியைத் தாண்டும்போதே,"இது தேவதச்சன் ஊர்," என்று சொன்னார். அவர் சிந்தனை முழுவதும் இலக்கியம்தான், எப்பொழுதும்.

லேனா குமார் என்ற ஒரு நண்பர் வீட்டில்தான் நெல்லை வந்தால், தங்கியிருப்பேன். நான் கட்டிலில் படுத்துக்கொள்வேன்; குமார், அவர் மனைவி, குழந்தைகள் பாயில். மாதக்கணக்கில் அவர் வீட்டில் தங்கியிருந்தாராம். இலக்கியம், பேச்சு, ஊர் சுற்றல் என்று நாட்கள் ஓடும், என சொல்லிக்கொண்டே போனார். அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை; அவரை இன்றே பார்த்தாக வேண்டும் என்றார்.

இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் முயற்சித்து, கடைசியில் மதுரை அருணாச்சலம் மூலம் லேனா குமாரின் தொலைபேசி எண் கிட்டியது. மாலை சந்திப்பதாக ஏற்பாடு.

கருத்தரங்கு முடிந்து, மதியம் திருச்செந்தூர் சென்றோம், திரும்பி வரும் வழியில், ஆழ்வார் திருநகரி போகலாம் சாரு என்றேன். ஆனால், லேனா குமாருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; தமிழ் இலக்கியம் இவரைப் போன்ற சிறுதெய்வங்களால்தான் காப்பற்றப்பட்டு வருகிறது என்றார். எனக்கு அப்பொழுது அவ்வளவாகப் புரியவில்லை.

தான் ஏன் கோயிலுக்கு போவதைவிட குமார் போன்றோரிடம் பேசுவதை அதிகம் விரும்புகிறேன் என்பதை சாரு சொல்ல ஆரம்பித்தார். மனிதர்கள் அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு, கடவுள்முன் வெட்கமின்றி நிற்பது பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்; அதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலின் சாராம்சம். கதையைக் கேட்க கேட்க, காரோட்டி அழுதுவிட்டார்.

நானும் கோயிலை ஒரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறேன் சாரு என்று சொல்லிகொண்டிருந்த போது, திரைப்பட இயக்குனர் அருண்குமாரிடமிருந்து சாருவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது; சேதுபதி படத்துக்கு சாருவின் ஆசியைக் கோரியிருந்தார்.

மாலை, லேனா குமாரை அவர் நண்பர்களுடன் சந்தித்தோம். சாருவும் குமாரும் இருபதாண்டு கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ, நேற்று மாலைதான் இருவரும் உரையாடிக்கொண்டிருந்ததைப் போலவும், அந்தப் பேச்சை இன்று மாலை தொடர்வது போலவும் அவர்கள் பேச்சு இருந்தது.

சாரு அப்பொழுது திருமண உறவில் பிரிந்து இருந்தார். மேலதிகாரியின் அழிச்சாட்டியம் தாங்காமல், வேலைக்குப் போய் மாதங்கள் ஆகிவிட்டன. குமாருடன் நெல்லை பேட்டையில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். உங்களுக்கு ஆறு மாதத்தில் இன்னொரு திருமணம் நடக்கும்; அரசு வேலையில் திரும்பவும் சேர்வீர்கள் என்றாராம் ஜோதிடர். சாருவும் குமாரும் நம்பாமல் சிரித்தார்களாம். (இந்த நிகழ்வின் சுருக்கிய வடிவம் ராஸ லீலாவில் உள்ளது.)

அந்த ஜோதிடரைப் பார்க்கவும் சாரு விரும்பினார். ஆனால், அவர் இறந்துவிட்டாராம்.

வருடந்தவறாமல், குமாரும் நண்பர்களும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் சென்றுவிடுகின்றனர். தினமும் மாலை, பாளையங்கோட்டையில் ஒரு டீக்கடையில் இலக்கிய விவாதம் உண்டு.

சாரு ஆன்லைன்கூட இவர்கள் வாசிப்பதில்லை. ஆனால், சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாசித்திருந்தார்கள். தி இந்துவில் எஸ்.ரா.வின் தொடரில் இருந்த ஒரு தகவல்பிழையை காட்டமாக விமர்சித்துக்கொண்டிருந்தார் குமார்.

ஒரு சிறு நகரத்தில், இலக்கியம் படிக்கும் நான்கைந்து நண்பர்களை ஒருங்கிணைத்து, புத்தகங்கள் பற்றி உரையாடி, விமர்சித்து, நண்பர்களுக்குப் பரிந்துரைத்து, வாசிப்பை ஊக்கப்படுத்தும் பணியைச் செய்துகொண்டிருப்பவர் குமார். ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று லேனா குமார்கள் இருக்கிறார்கள். பெரம்பலூரில் தாரேஸ் அஹமது. ஈரோட்டில்  ஸ்டாலின் குணசேகரன்.

இவரைப் போன்ற சிறுதெய்வங்கள் தங்களை விளம்பரப்படுத்திகொள்வதில்லை.  முகநூலில் கூட இவர்களுக்கு கணக்கில்லை. ஆனால், தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் வாசிப்பை பரப்புவதிலும் இவரைப் போன்ற சிறுதெய்வங்களின் பங்கு அலாதியானது.



Tuesday, January 26, 2016

இந்தியா 1948 - மதிப்புரை



சந்தர்ப்பவசத்தால், இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சுந்தரம் என்பவனுடைய கதையை இந்நாவலில் அசோகமித்திரன் சொல்லுகிறார்.

யுத்தங்களுக்கிடையில் நாவலில் வரும் பம்பாய் அண்ணாதான் இந்த நாவலில் சுந்தரம்.

எளிய கதை. சுந்தரத்தின் மனக்கிலேசங்கள்தான் நாவல் முழுவதும். ஆனால், சுந்தரம், பார்வதி, லட்சுமி, அம்மா, மாமியார், மணி, ஜானகி, நிர்மலா, விநாயக் முதலிய சுவாரசியமான கதாப்பதிரங்கள், நாவலுக்கு சுவை கூட்டுகிறது.

எழுபது ஆண்டுகள் முந்தைய பம்பாய் எப்படியிருந்தது; தாராவி எப்படியிருந்தது; மின்சார ரயில்கள் எப்படியிருந்தது, என அந்தக்கால பம்பாய் ஒரு பாத்திரமாக நாவலில் உள்ளது.

சுதந்திர இந்தியாவின் ஆரம்ப நாட்களில் தில்லியில் அதிகார வர்க்கம் எடுத்த நிலைபாடுகள் என்ன என்பதையும் இந்நாவல் மூலம் அறிய முடிகிறது.

1946 - 1948-இல் அமெரிக்கா எப்படியிருந்தது; இரண்டாம் உலகப் போர் முடிந்து நாடு திரும்பிய போர் வீரர்களின் மனநிலை, அவர்களை அந்நாடு எதிர்கொண்ட விதம் ஆகியவற்றையும் விலாவரியாக கூறியிருக்கிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் நாவல்களில் தொடர்ந்து, அம்மா கதாபாத்திரங்கள் வலிமையானவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். மகன்கள் மற்றும் மருமகள்கள் அம்மாவைப் பார்த்து பயப்படுகிறார்கள். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை அம்மாதான் எடுக்கிறாள். சுந்தரம் தன் இரண்டாம் திருமணம் பற்றி தன் மனைவி எப்படி எடுத்துக்கொள்வாளோ என்பதைவிட, தன் அம்மா எப்படி எடுதுக்கொள்வாளோ என்றுதான் அதிகம் பயப்படுகிறான்.

சுந்தரம் தன் மாமனாரிடம் பேசுமிடம் ரசமானது. படேல், கிருஷ்ணன் குடும்பத்தை வீட்டை விட்டு காலி செய்ய சொல்லுமிடமும் பிடித்திருந்தது.

நற்றிணை வெளியீடு. இணையத்தில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023953.html

Friday, January 1, 2016

மெனிஞ்சியோமா - விமர்சனம்



நண்பர் செல்வக்குமார் கணேசன், "எனக்குப் பிடிக்கவில்லை; நீங்கள் டாக்டர் என்பதால் இந்த நாவல் உங்களுக்குப் புரியும்," என்று சொல்லிக் கொடுத்தார் இந்த நாவலை.

'மெனிஞ்சியோமா' என்பது மூளையில் வரும், உயிருக்கு ஆபத்தில்லாத ஒருவகை கேன்சர். அறுவைசிகிச்சை மூலம் சந்துருவுக்கு அந்த கட்டி அகற்றப்படுகிறது. அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் 'எனிமா'வில் ஆரம்பிக்கிறது சந்துருவுக்கான கஷ்டங்கள். அறுவைசிகிச்சைக்குப் பின் தீவிர கண்காணிப்பு வார்டில் அவன் படும் இல்லல்கள், வீட்டுக்கு வந்த பின் அவனுக்கு வரும் வலிப்பு, அதனால் அவன் மனமும் உடலும் படும் இல்லல்கள், அவன் தந்தையின் மன வருத்தம் ஆகியவற்றை இந்த நாவல் சொல்கிறது.

ஓரிடத்தில் 'discharge summary' என்று நோயாளியின் MRI சோதனையின் முடிவுகள் தரப்பட்டிருக்கிறது - அதுவும் தப்புந்தவறுமாக. ஆங்கில வார்தைகள் குறைக்கப்பட்டு, தேவையில்லாத மருத்துவ 'name droppings'-ஐ தவிர்த்திருந்தால், ஒரு நல்ல நாவல் கிடைத்திருக்கலாம். மூளையின் உள்ளமைப்பு, அதன் நரம்புப் பின்னல்கள், ரசாயன மாற்றங்கள் ஆகியவற்றை கூகிளில் இருந்து எடுத்து எழுதினதுபோல், செயற்கையாக, தேவையில்லாததாக உள்ளது.

சில பிணியாளர்கள் - அதுவும் குறிப்பாக முடக்குயியல் (Rheumatology) பிணியாளர்கள் - தங்கள் நோய்மை பற்றியும், அதற்கான மருந்துகள், மருத்துவ முறைகள் பற்றியும் நன்றாக, தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த நாவலில், கணேசகுமாரன், மருத்துவக் குறிப்புகளை, மூளை பற்றிய, மூளையின் ரசாயனங்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமல்கூட சந்துருவின் நோய்மையை, அவனின் வலியை வாசகனுக்குக் கடத்தியிருக்க முடியும். சாரு நிவேதிதாவின் 'ராஸ லீலா'வில் கண்ணாயிரம் பெருமாள் 'பைபாஸ்' அறுவைசிகிச்சைக்குப் பின், மருத்துவமனையில் இருக்கும் பிரதி, குறைவான மருத்துவ வார்த்தைகளுடன்தான் இருக்கும். ஆனால், படிக்கும் வாசகனுக்கு, கண்ணாயிரம் பெருமாளின் நோய்மை, அவனின் உடல்-மன வலி ஆகியவற்றை வாசகனுக்குக் கடத்தியிருப்பர் சாரு நிவேதிதா. ராஸ லீலாவில் intense-ஆன பகுதி அது.

சந்துருவின் அப்பா படும் கஷ்டத்தை மட்டும் கணேசகுமாரன் சரியாக, வாசகனுக்குக் கடத்தியிருகிறார். 

புதிய களம்; ஆனால், இன்னும் செறிவான வார்த்தைகள் (மருத்துவ வார்த்தைகள் அல்ல), இன்னும் சரியான கதைசொல்லல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால், ஒரு காத்திரமான பிரதி நமக்குக் கிடைத்திருக்கும்.

கணேசகுமாரனின் சிறுகதைகளை சாரு நிவேதிதா தனது வலைதளத்தில் பாராட்டியிருந்தார். படித்துப் பார்க்கவேண்டும்.