Friday, February 5, 2016

பின்நவீனத்துவ போலி - சுரேஷ் கண்ணன் கட்டுரையை முன்வைத்து

நான் நாற்பது வருட அனுபவம் உள்ள ஒரு மருத்துவர் என வைத்துக்கொள்வோம். லண்டனிலும் அமெரிக்காவிலும் சிறப்புப் பயிற்சிகள் முடித்துள்ளேன். லட்சக்கணக்கான பிணியாளர்களை குணமாக்கியுள்ளேன். ஆயிரக்கணக்கான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளேன்.
ஒருவர், என் அறுவைசிகிச்சை யுத்திகளை (surgical techniques) குறை சொல்லலாம். இந்த பிணியாளருக்கு இந்த மருந்து தரக்கூடாது என ஒருவர் வாதாடலாம். நான் அதிகமாகக் கட்டணம் வாங்குகிறேன் என குற்றம் சாட்டலாம். தேவையின்றி ரத்தப் பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் ஆகியவற்றை பரிந்துரைக்கிறேன் என குற்றம் சாட்டலாம். இவை அனைத்தும் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள். அவற்றை நான் தாரளாமாக வரவேற்கிறேன்.
ஆனால், இவர் டாக்டரே இல்லை, இவர் போலி டாக்டர் என ஒருவர் சொன்னால், அது என் மீது வைக்கப்படும் விமர்சனம் இல்லை; அவதூறு. நான் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
***
சாரு நிவேதிதா, ஜே ஜே சில குறிப்புகள் நாவலை போலி என்றாரே என நீங்கள் கேட்கலாம். சாரு நிவேதிதா தன் கருத்தை நிறுவ 1980களிலேயே அந்த விமர்சனத்தை தனி புத்தகமாகப் போட்டு, இலவசமாக விநியோகித்தார். எதற்கு? தமிழுக்காக. அந்தக் கட்டுரைகள் தற்போது, வரம்பு மீறிய பிரதிகள் புத்தகத்தில் உள்ளன. உயிர்மை வெளியீடு. நீங்கள் சாருவின் எழுத்தை போலி என்கிறீர்களா? உங்கள் கருத்தை நிறுவ ஐநூறு பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள். வேண்டாம், குறைந்தது ஐம்பது பக்கம்.

Thursday, February 4, 2016

ஓஷோவும் சாரு நிவேதிதாவும்


ஓஷோ இந்த விடியோவில் மூச்சுக்கு முந்நூறு தடவை ‘fuck’ என்கிறார். கேட்கும் அனைவரும் வாய் ஓயாமல் சிரிக்கின்றனர். இப்பொழுது பார்க்கும் பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.



அதே போல், எக்ஸைல் (பக்கம் எண் 319, 320 – இரண்டாம் பதிப்பு) நாவலில் பு** என்ற வார்த்தையை இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா, என்று எண்ணும்படி சாரு எழுதியிருப்பார். சிரிக்க சிரிக்க படிக்கலாம்.

பாஷோ - வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள்

கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் 'பாஷோ' கவிதை இதழ் பற்றி நிறைய நிலைத்தகவல்கள். தாங்கள்தான், இதை முதன்முதலில் வெளியே சொல்கிறோம் என்ற போலி இறுமாப்புவேறு. சாரு நிவேதிதா புதிய தலைமுறையில் வெளியான வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் தொடரில், ஃபெப்ருவரி 19, 2015 அன்று எழுதியுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள், உயிர்மை வெளியீடாக, ஃபெப்ருவரி 27, 2016 அன்று வெளியாகிறது.


***


பாஷோ - புகைப்படம் நன்றி: விக்கிமீடியா காம்மன்ஸ்



“பாஷோ. ஜப்பானின் அதிமுக்கியமான ஹைக்கூ கவிஞன். பிறப்பு 1644. ஒரு சாதாரண சாமுராய் வீரனின் மகனாகப் பிறந்த பாஷோ ஜப்பானிய ஹைக்கூவின் தலைசிறந்த கவியாகக் கொண்டாடப்படுகிறார். அவர் 1689-ஆம் ஆண்டு கையில் ஒரு காசு எடுத்துக் கொள்ளாமல் ஐந்து மாதங்கள் நடந்தே 1200 மைல் தூரம் பயணம் செய்தார். பிரபலமான கவியாக இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளும் மாணவர்களுக்கு இலக்கியம் கற்பித்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் உணவு உட்கொண்டார். அந்தப் பயண அனுபவங்களை ஹைக்கூ ஆகவும் உரைநடையாகவும் பதிவு செய்திருக்கிறார். அதில் ஒரு ஹைக்கூ:


கொசுக்களும் பூச்சிகளும் கடிக்க
இரவு முழுதும் உறக்கம் இல்லை
தலைக்கு அருகில் ஒரு குதிரை மூத்திரம் பெய்கிறது.


இப்போதும் பாஷோ நடந்து சென்ற 1200 மைல்களையும் நடந்தே கடப்பதை பலரும் ஒரு புனித யாத்திரையாகவே மேற்கொள்கின்றனர். அதே பாதையில் என் கவி நண்பன் கவினோடு ஒருமுறை செல்ல வேண்டும் என்று எனக்கொரு ஆசை. இன்னும் கவினை நான் சந்தித்தது இல்லை. கவிதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். கவினின் கவிதைகளை வாசிப்பது ஒரு தியானத்துக்குள் சென்று நம்மை மறந்து விடுவது போன்ற அனுபவம். மாதிரிக்கு இரண்டு:


கல்லறை மேல்
அமரும் பறவைகள்
கனவுகளையெடுத்து
பறந்து போகின்றன
ஆகாயத்திற்கு அப்பால்.


***


ஒரு வானம் வைத்திருக்கிறேன்
ஒரு கோடி சிறகுகளும் வைத்திருக்கிறேன்.


***


கவின் இப்போது பாஷோ என்ற பெயரில் ஒரு வித்தியாசமான கவிதை இதழைக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டே பக்கம். மஞ்சள் மற்றும் பிங்க் வண்ணங்களில் வழவழ தாள். முழுக்கவும் ஹைக்கூ கவிதைகள். அதில் அய்யப்ப மாதவனின் ஒரு கவிதை:


புத்தனின் அசைவற்ற
மடியில் நிற்கிறது
அந்தரத்தில் அலைந்த காகம்.  


முகவரி, கோவைக்கு அருகில் நடுப்பட்டி கிராமம் என்று போட்டிருக்கிறது. ம்…  தமிழ் இலக்கியம் பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடப்பதில் எனக்குக் கன குஷி. பாஷோ படித்ததால் எனக்குத் தோன்றிய ஒரு குட்டிக் கவிதை:


அன்பைப் பொழி
ஆசையை ஒழி.”

***