Wednesday, April 6, 2016

மனம் கொத்திப் பறவை - மதிப்புரை


சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் 'வாழ்வது எப்படி? - 1, 2, 3...' என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம்.

இந்தத் தொகுப்பின் ஆரம்பக் கட்டுரைகளில் நமக்கு அதிகப் பரிச்சயம் இல்லாத கோலா பூஃப் பற்றியும் ஹௌபாரா என்ற அறியவகைப் பறவை பற்றியும் சாரு நிவேதிதா எழுதுகிறார்.


ஏன் என்று யோசித்ததில், இது ஒரு உத்தி என புரிந்தது. இந்தப் பெயர்களை முதலில் காட்டி, வெகுஜன இதழ் மட்டுமே படிக்கும் ஒரு வாசகனை உள்ளே இழுக்கிறார் சாரு நிவேதிதா. ஹௌபாரா பற்றிக் குறிப்பிட்டு, அதே கட்டுரையில் ஹேமலட்டில் இருந்து இந்த வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.


"There is special providence in the fall of a sparrow. If it be now it is not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come - the readiness is all."


ஆங்கிலத்தில் இதன் சாரத்தை முழுவதும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதே கட்டுரையில் இந்த வரிகளை மிக அருமையாக சாரு மொழிபெயர்த்திருக்கிறார்.


“இப்போது நடக்கும் என்றால், அது நடக்காமல் போகலாம்; நடக்காது என்றால், நடந்தாலும் நடந்துவிடலாம்; இப்போது நடக்கவே நடக்காது என்றால் அது நடந்தே தீரும். எல்லாம் நடப்பவற்றை எதிர்கொள்ளும் ஆயத்தத்தில்தான் இருக்கிறது. எப்படி பிதாவின் சித்தம் இல்லாமல் ஒரு சிட்டுக்குருவி தரையிலே விழாதோ, அதுபோலவே நம்முடைய உயிர் போவதும் போகாமல் இருப்பதும் இறைவனின் கையில்தான் இருக்கிறது!”

இந்தத் தொகுப்பில் வெளிப்பட்டிருக்கும் சாருவின் கோபம் பரிசுத்தமானது (innate) மற்றும் நியாயமானது (justified). ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடுவது பற்றிய பயிற்சி ஒன்று நடக்கிறது. காவலரின் கவனக்குறைவால், தோட்டா நிரப்பிய துப்பாக்கி, பயிற்ச்சியில் பயன்படுத்தப் படுகிறது. இதில் இரண்டு மாணவர்கள் இறக்கிறார்கள். அதிகம் போனால், இந்தக் காவலரை இடைநீக்கம் செய்வார்கள். இதுவே ஒரு ஐரோப்ப தேசத்தில் நடந்திருந்தால் கலவரம் வெடித்திருக்கும்; இங்கு இது மற்றும் ஒரு செய்தி, அவ்வளவுதான், எனக் கோபப்படுகிறார் சாரு. மேலும், தான் கலவரத்தை நியாயப் படுத்தவில்லை; தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார் சாரு. இதற்கு மேல்தான் விஷயமே.


சாருவின் கோபம் innate என்று சொன்னேன் அல்லவா. இந்த வரிகளைப் படியுங்கள்.


"மாணவர்கள் ஏன் துப்பாக்கிபற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? துப்பாக்கி என்பது மனித உயிர்களைக் கொல்வதற்காக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொலைக் கருவி; மனித நாகரிகத்தின் அவலங்களில் ஒன்று. துப்பாக்கியே இல்லாத சமூகம் உருவாவதைப்பற்றி அல்லவா மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அன்பையும் பண்பையும் போதிக்க மறந்துவிட்ட நாம், நம் குழந்தைகளுக்கு இவ்வாறாக வன்முறையைப் போதித்துக்கொண்டு இருக்கிறோம்."


சாருவின் உலகம் தனி. நம் உலகின் அசிங்கங்கள் அவருக்கு அந்நியமானவை. அவர் ஆன்மா பரிசுத்தமானது. அதுவே அவர் எழுத்திலும் வெளிப்படுகிறது.


***

மனம் கொத்திப் பறவை - முதல் பதிப்பு, 2010 - விகடன். இரண்டாம் பதிப்ப்பு, 2016 - உயிர்மை. 

இணையம் மூலம் வாங்க: http://bit.ly/1TJIDzN

Thursday, March 24, 2016

இச்சைகளின் இருள்வெளி - விமர்சனம்

இச்சைகளின் இருள்வெளி: சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்.


இது பாலியல் கிளர்ச்சி ஊட்டும் புத்தகம் இல்லை. சமூகம் பேசத் தயங்குகின்ற, taboos என்று நினைக்கிற விசயங்களைப் பற்றியும் ஆண் - பெண் உறவின் சிடுக்குகள், சிக்கல்கள் பற்றியும் இந்நூலில் சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பெண்கள் கோருவது சுதந்திரம் அல்ல, சமத்துவம் என்று ஓரிடத்தில் சொல்கிறார் நளினி ஜமீலா. சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் இந்த புத்தகத்தின் பக்கங்களை சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் நான் உசத்தி, நீ உசத்தி என்ற எந்த எண்ணமும் இல்லை.

முதலிரவில் முன்பின் தெரியாத ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள பெண்ணை அனுப்புவது குடும்பமே சேர்ந்து செய்யும் வன்கலவி என்று ஓரிடத்தில் சொல்கிறார் ஜமீலா.

நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும்,

நம் சமூகம் எப்படி உள்ளது என்று சாரு நிவேதிதா ஓரிடத்தில் கூறுகிறார்:

"பணமில்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது போல் ஆகிவிட்டது. கன்ஸ்யூமர் கலாச்சாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு ஆடம்பர மோகம் அதிகமாகிவிட்டது. வாழ்வின் ஜீவாதாரமான மதிப்பீடுகளையும் அறவுணர்வையும் தூக்கியெரிந்துவிட்டு மனிதர்கள் மிகக் கேவலாமான சினிமாப் பாணி வாழ்க்கையைக் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையாயிருக்கும் பணத்துக்காக எதையும் செய்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டுவிட்டது சமூகம்." (பக்கம் 47)

சில விசயங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள். சில விசயங்களில் முரண்படுகிறார்கள். தீர்வை வாசகனுக்கே விட்டுவிடுகிறார்கள்.

பாலியல் தொழில் முறையாக்கப்பட வேண்டும்; வெளிநாடுகள் போன்று செக்ஸ் கிளப்புகள் நம் நாட்டிலும் வேண்டும் என்று இருவருமே சொல்கிறார்கள். அதற்கான காரணங்களை விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பாலியல் கல்வி வேண்டும் என்று ஜமீலா சொல்கிறார். வேண்டாம் என்று சாரு சொல்கிறார். நம் சமூகம் முதலில் அனைவருக்கும் கல்வியை ஒழுங்காகக் கொடுக்கட்டும்; பின்னர் பாலியல் கல்வி பற்றி பேசலாம். மேலும், பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்பவர்கள் உயர் வர்கத்தினராகவும், பிராமணர்களாகவுமே இருகிறார்கள். தங்கள் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் கெட்டுப்போய்விடக் கூடாது என்று பயப்படுகிற ஆட்கள்தான் பாலியல் கல்வி வேண்டும் என்கிறார்கள். அந்த காலத்து 'chastity belt' போல அவர்கள் பாலியல் கல்வியை நினைக்கிறார்கள் என்று சாரு சொல்கிறார்.

இருவரும் பல சுவையான விசயங்களை இப்புத்தகத்தில் கூறுகின்றனர். ஜமீலா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போராளி அஜிதா பேசினாராம். கணவன் மனைவியை அடிக்கக்கூடாது என்று அஜிதா பேசியுள்ளார். அப்பொழுது, கூட்டத்தில் அமர்ந்திருந்த அஜிதாவின் மகள் எழுந்து, அம்மாக்கள் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று சொன்னாராம்.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என ஜமீலா சாருவைக் கேட்கிறார். அதற்கு சாரு சொல்லும் பதில் காவியம். படித்துப் பாருங்கள்.

இணையம் மூலம் வாங்க: http://www.nhm.in/shop/1000000025315.html

பின்குறிப்பு:

இந்நூலின் முதல் பதிப்பு 'பாலியல் - சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்' என்ற தலைப்பில் ஜனவரி 2008-இல் தென்திசைப் பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு ஃபெப்ருவரி 2016-இல் உயிர்மை பதிப்பகம் 'இச்சைகளின் இருள்வெளி' என்ற தலைப்பில் வெளியிட்டது.

Tuesday, March 15, 2016

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா - அரங்கு Installation பற்றி

வடிவமைத்தவர்: ஓவியர் ஸ்ரீனிவாசன்; சாருவின் புகைப்படம்: பிரபு காளிதாஸ்

(குறிப்பு - படத்தை click செய்து, முழுத்திரையில் பார்க்கவும்)

சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஓவியர் ஸ்ரீனிவாசன் வடிவமைத்தது இந்த installation. மின்னஞ்சலில் அவர் அனுப்பியபோழுதே, பார்த்தவுடன் பிடித்துவிட்டது. வலது பக்கம் இருக்கும் floral designs யோனியின் வடிவம் போல் இருந்தது.

சாருவின் புகைப்படம் தலைகீழாக இருந்தது சாருவின் rebellious தன்மைக்கு பொருத்தமாக இருந்தது.

கீழே இடது மூலையில் ஒரு square இருந்தது. எதற்கு தனியாக இப்படி square வைத்திருக்கிறார், எதற்கு படத்தின் கீழே சாரு நிவேதிதா என்ற பெயர் வருகிறது என்றும் புரியவில்லை.

சாருவுக்கும் இந்த படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் fonts பிடித்திருந்தது. முதல் தடவை பார்த்தவுடனே அவர் இந்த installation-ஐ okay செய்துவிட்டார். எந்த மாற்றமும் செய்யச்சொல்லவில்லை. "சாரு, ஏன் square வச்சிருக்காரு, ஏன் கீழ சாரு நிவேதிதான்னு பேர் இருக்கு? இதை ரெண்டையும் எடுக்க சொல்லிரலாமா?" என்று சாருவிடம் ஞானசூன்யமாகக் கேட்டேன். அவரும், "எடுக்க சொல்லிருங்க," என்றார். தொலைபேசியை வைத்தவுடன் திரும்பவும் அழைத்து, "ஸ்ரீராம், உங்களுக்கும் இதைப் பத்தி தெரியாது, எனக்கும் தெரியாது. அந்த square-உம் கீழே இருக்கும் பேரும் ஏதோ காரணமாகத்தான் வச்சிருப்பார்; Both adds something to the overall texture," என்றார்.



ஓவியர் ஸ்ரீனிவாசனுடன் பின்னர் பேசிக்கொண்டிருந்தபொழுது, இந்த installation-இல் பயன்படுத்தியிருக்கும் யுத்தியின் பெயர் 'Op Art' என்று விளக்கினர், 1930-களில் இந்த முறை பயன்பாட்டிற்கு வந்தது என்றார். 1930 - '60கள் வரை இங்கிலாந்தில் இந்த movement பிரபலமாக இருந்தது என்றும் கூறினார்.

"அந்த floral designs-உம், வலது மூலையில் உள்ள square-உம், கீழே உள்ள சாரு நிவேதிதா என்ற பெயரும், தலைகீழாக இருந்த சாருவின் படமும் இந்த படத்தைப் பார்க்கும் ஒருவனை disturb செய்யும். பார்வையாளனை 'சாரு நிவேதிதாவின் ஒன்பது புத்தகங்கள் வெளியீட்டு விழா' என்ற text-ஐ நோக்கி அவன் பார்வையை செலுத்த வைக்கும்," என்றார்.

மேலும், "தலைகீழாக இருக்கும் சாருவின் படத்தில் அந்த கண்கள் vertical-ஆக ஒரே நேர்கோட்டில் இருக்கும். இதை இரண்டு தனி புகைப்படங்கள் என்று புரிந்துகொள்ளக் கூடாது. இது ஒரு தனி புகைப்படம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்," என்றார்.

மேலும், "வெறும் யுக்தியாக மட்டும் இந்த installation-ஐ புரிந்துகொள்ளக் கூடாது. வேறு எந்த எழுத்தாளருக்கும் இப்படி தலைகீழாக படம் வைக்க முடியாது. சமூகத்தின் பொதுபுத்தியிலிருந்து விலகி, status quo-வுக்கு எதிராக செயல்படும் சாருவுக்கு மட்டுமே இந்த installtaion பொருந்தும்," என்றார்.