Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts
Showing posts with label இந்திரா பார்த்தசாரதி. Show all posts

Friday, December 25, 2015

ஏசுவின் தோழர்கள் மற்றும் சத்திய சோதனை - விமர்சனம்







ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் அரசியல் கருத்துக்களின் தாக்கம் சாரு நிவேதிதாவிடம் இருந்திருக்கலாம்; அல்லது, இருவரும் ஒரே அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். இருவருக்கும் கம்யூனிசம்பற்றி ஒரே கருத்துதான் இருக்கிறது.

இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள், அசுவாரசியாமான ஒரு நாவல். கம்யூனிச போலந்தில் நடக்கும் கதை.

சுஜாதாவின் சில விஞ்ஞான கதைகளில் வேற்றுகிரக ஜீவிகள், மிகுந்த அடக்குமுறைக்கு ஆட்பட்டிருப்பார்கள். சகலத்திற்கும் 'ரேசன்' முறை, சகலத்திற்கும் அரசின் அனுமதி என இருக்கும். அவற்றை படிக்கும்போது அதீத கற்பனையோ என தோன்றும். கம்யூனிச போலந்தில் அவை நடைமுறையில் இருந்தது இந்நாவல் மூலம் தெரிகிறது.

கதைசொல்லி போலந்த் சென்றாலும், கதை, கதைசொல்லியின் வீடு, தூதரகம், தூதர் வீடு, என ஒரு குறுகிய வட்டத்தில் நடக்கிறது. நாவலாசிரியர் கம்யூனிசம் எளிய மனிதனை எப்படி பாதித்தது என இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். இதே கருத்தை வெங்கட் சாமிநாதனும் கூறுகிறார்.

'Frenzy of Exultations' என்ற அற்புதமான ஓவியத்தைப் பற்றி இந்நாவலின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது.

Frenzy of Exultations




***

ஏசுவின் தோழர்கள் மின்னூல் வாங்க: https://play.google.com/store/books/details?id=I3GOCgAAQBAJ


***

சத்திய சோதனை



ஓரிரவு ரயில் பயணத்தில் படித்த நாவல். இலக்கிய ஆசிரியர் pulp எழுதலாம். சுஜாதாவின் pulp அளவுக்குக்கூட இந்நாவல் இல்லை. கண்டிப்பாகப் படிக்க வேண்டாம்.

***

Friday, November 27, 2015

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - விமர்சனம்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - இந்திரா பார்த்தசாரதி




இந்த புத்தகத்தை மின்னூலாகப் படிக்க: https://play.google.com/store/books/details?id=tHCOCgAAQBAJ


முதல் பதிப்பு 1971-இல் வந்தது. 
தற்போதைய பதிப்பு - கிழக்கு பதிப்பகம்

***
அமிர்தம் - திலகம். மத்திய வயது. குழந்தை இல்லா தம்பதி. அமிர்தம் தன் இளமையில் நித்யாவைக் காதலிக்கிறான். தன் தகப்பன் தன்னை மீறி திருமணம் நிச்சயிக்க, நித்யாவிடம் நாளையே நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்கிறான். நித்யா தன் தாயையும், மாமாவையும் சம்மதிக்க வைக்க அவகாசம் கேட்கிறாள். இவன் இப்பொழுதே பதில் சொல் என நச்சரிக்க, அவள் அமைதியாய் கண்கள் மூடி அந்த உணவகத்தின் மெல்லிய இசையை ரசித்துக்கொண்டிருகிறாள். இப்படியாக, அமிர்தம் - நித்யா காதல் முறிகிறது.
இருபது வருடம் கழித்து, ஒரு நாடகத்தில் நித்யாவின் சாயல்கொண்ட, நித்யாவின் துறுதுறுப்புகொண்ட பானுவை, அமிர்தம் சந்திக்கிறான். அவனுக்கு நாடகம் பிடிக்கவில்லை; தன் மனைவிக்காக வந்தான். நாடகம் முடிந்து, பானுவை காரில் அவள் வீட்டில் விட நேர்கிறது. இங்கே ஆரம்பிகிறது நாவலில் வேகம். தீ பற்றிக்கொண்டு சர்ரென்று செல்கிறது.
பானுவின் அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். பானுவின் சிறுவயதிலேயே அவன் இறந்துவிடுகிறான். தன் பழைய காதலியின் சாயை கண்டு, பானுவிடம் பழக ஆரம்பிக்கிறான், அமிர்தம். நல்லவேளை, பானுவின் அம்மாதான் நித்யா என கதையைக் கொண்டு செல்லவில்லை.
தன் முதுமையை இளமையாக மாற்றும் யயாதியாக அமிர்தம் பானுவைப் பார்க்கிறான். தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து செல்வதை திலகம் தாங்கமுடியாமல் சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கிறாள்; அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். தன் மகள் மணமான ஒருவருடன் பழகுவதை பானுவின் அம்மா கண்டிக்கிறாள். அமிர்தம் தன் ரசனைக்கேற்ற துணையுடன் இல்லை என்று பரிதாபப்பட்டும், அவனை உள்ளுராக ஒரு தகப்பன் நிலையிலும் (father figure) வைத்து, பானு அவன் மேல் ஈடுபாடு கொள்கிறாள். இவர்களிடையே நடக்கும் எண்ண மோதல்கள்தான் இந்த நாவல்.
அமிர்தமின் பயம், தயக்கம், செய்து பாப்போம் என்ற தைரியம், குழப்பம் ஆகியவற்றை அழகாக சித்தரித்துள்ளார் இந்திரா பார்த்தசாரதி. வயது பற்றிய obsessionதான் பானு மீதான காதலுக்கும், திலகத்தின் மீதான வெறுப்புக்கும் காரணமென  கடைசியில் அமிர்தம் உணர்கிறான்.
முடிவு ஏற்றுக்கொள்ளும்படியானது. அமிர்தமும், திலகமும், பானுவும், பானுவின் அம்மாவும் அப்படிதான் செய்திருப்பார்கள். கடைசி வரியில் வரும் தொலைபேசி யாருடையது? பிரமையோ, திலகமோ, பானுவோ, பானுவின் அம்மாவோ என கேட்கிறார் முன்னுரையில் தி.ஜானிகிராமன். நான் அது திலகமின் அழைப்பு என்கிறேன்.
நாவல் முழுவதும் பகடி, நவீன சிந்தனை, ஆண் பெண் உறவு, எக்சிஸ்ட்டென்ஷலிச கணங்கள் ஆகியவை விரவிக்கிடக்கின்றன.
நிகழ்காலத்திலிருந்து, இறந்தகாலத்திற்கும், பின் திரும்பவும் நிகழ்காலத்திற்கும் ஓரிரு வரிகளில் சட்டென அனாயசமாக, குழப்பமில்லாமல் மாறுகிறார் இந்திரா பார்த்தசாரதி.