Thursday, January 31, 2019

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - மதிப்புரை


கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில்  தலித்கள் மீதான ஆதிக்க ஜாதியினரின்
அடக்குமுறையைப் புரிந்துகொள்ள இந்த நாவல் ஒரு முக்கியமான ஆவணம்.

1980களின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு கதையில் ஆதிக்க ஜாதி மாணவர்கள் தலித் ஆசிரியர்களையும் தலித் மாணவர்களையும் ஜாதியைச் சொல்லித் திட்டி அவமானப்படுத்துகின்றனர். இவ்வளவுக்கும் கதை நாயகன் பத்து வயது பழனிச்சாமியின் அப்பா வேறொரு பள்ளியில் ஆசிரியர். அவர் அவனைக் கண்டித்தும் அவன் திருந்தினபாடில்லை. மற்றபடி, அவனது சிறுவயது விளையாட்டுக்கள், நண்பனோடு சேர்ந்து திருப்பூருக்குச் சென்று சினிமா பார்ப்பது, பீடி குடிப்பது, கோவையில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்வது முதலியவை சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளன.

மற்றொரு கதையின் நாயகன் மாரிமுத்து சிறுவயதில் தன் மாமாவின் தறிப்பட்டறையில் வேலைக்குச் செல்கிறான். மாமன் மகள் லட்சுமி ஒரு தலித் இளைஞனைக் காதலிக்கிறாள். மாமாவிடம் கோல்மூட்டி, அந்தக் காதலை மாரிமுத்து பிரிக்கிறான். மாமா தன் பங்காளிகளுடன் சேர்ந்து அந்தக் காதலனையும் அவர் தந்தையையும்  கட்டி வைத்து உதைக்கிறார். உனக்கு கல்யாணமே ஆகாது என லட்சுமி அழுதுகொண்டே மாரிமுத்துவிடம் சாபம் இடுகிறாள். முப்பத்தைந்து வயதில் தன் மற்றொரு மாமன் மகள் பூங்காவனத்தைக் காதலிக்கிறான் மாரிமுத்து. மேற்கொண்டு என்ன ஆனது, மாணிக்கம் அத்தை என்பவள் யார் முதலியவற்றை நாவல் படித்து தெரிந்துகொள்ளுங்கள். மாணிக்கம் அத்தைக்கும் மாரிமுத்துவுக்கும் நடக்கும் அந்த மழை உரையாடல் மிக அருமை. மாரிமுத்துவுக்கும் அவனது நாய் ராஜாவுக்குமான உறவு நன்றாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலில் பிடித்தது, எந்த ஒரு பாத்திரத்துக்கும் குற்ற உணர்வோ, வருத்தமோ இல்லை. அவர்கள் தீமை செய்ய அஞ்சுவதில்லை. அதற்கான நியாயங்களும் கற்பிக்கப்படுவதில்லை.  போதனை துளியும் இல்லை. வா.மு. கோமுவுக்குப் பாராட்டுகள்.

சுவராசியமான கதைசொல்லல். Pleasure of the text உத்திரவாதம்.

குறைகள்: இன்னொரு முறை பிழைத்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். எண்ணற்ற நிறுத்தற்குறி பிரச்சனைகள், ஒற்றுப் பிழைகள். வாக்கியத்தின் நடுவிலேயே கேள்விக்குறி வருகிறது. 

இணையம் மூலம் வாங்க: tinyurl.com/vamukomu57