Thursday, March 24, 2016

இச்சைகளின் இருள்வெளி - விமர்சனம்

இச்சைகளின் இருள்வெளி: சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்.


இது பாலியல் கிளர்ச்சி ஊட்டும் புத்தகம் இல்லை. சமூகம் பேசத் தயங்குகின்ற, taboos என்று நினைக்கிற விசயங்களைப் பற்றியும் ஆண் - பெண் உறவின் சிடுக்குகள், சிக்கல்கள் பற்றியும் இந்நூலில் சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பெண்கள் கோருவது சுதந்திரம் அல்ல, சமத்துவம் என்று ஓரிடத்தில் சொல்கிறார் நளினி ஜமீலா. சாரு நிவேதிதாவும் நளினி ஜமீலாவும் இந்த புத்தகத்தின் பக்கங்களை சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் நான் உசத்தி, நீ உசத்தி என்ற எந்த எண்ணமும் இல்லை.

முதலிரவில் முன்பின் தெரியாத ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள பெண்ணை அனுப்புவது குடும்பமே சேர்ந்து செய்யும் வன்கலவி என்று ஓரிடத்தில் சொல்கிறார் ஜமீலா.

நாம் சினிமாவில் என்ன பார்ப்போம்? பாலியல் தொழிலாளியை கதாநாயகன் காதலித்து, அவளை மீட்பான்; அவள் வாழ்க்கை அதன்பின் வசந்தமாகும். ஆனால், நிதர்சனத்தில் அப்படி இல்லை. அவளுக்கு குழந்தையைக் கொடுத்துவிட்டு, அவன் பெரும்பாலும் ஓடிவிடுகிறான். அந்த குழந்தையும் வளர்ந்து பாலியல் தொழிலாளி ஆகுகிறாள். இவ்வாறு, நம் பொதுபுத்தியில் பதிந்திருக்கும் பல விசயங்களை கட்டுடைக்கிறார்கள் இருவரும்,

நம் சமூகம் எப்படி உள்ளது என்று சாரு நிவேதிதா ஓரிடத்தில் கூறுகிறார்:

"பணமில்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது போல் ஆகிவிட்டது. கன்ஸ்யூமர் கலாச்சாரம் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு ஆடம்பர மோகம் அதிகமாகிவிட்டது. வாழ்வின் ஜீவாதாரமான மதிப்பீடுகளையும் அறவுணர்வையும் தூக்கியெரிந்துவிட்டு மனிதர்கள் மிகக் கேவலாமான சினிமாப் பாணி வாழ்க்கையைக் காப்பியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையாயிருக்கும் பணத்துக்காக எதையும் செய்வதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டுவிட்டது சமூகம்." (பக்கம் 47)

சில விசயங்களில் இருவரும் ஒத்துப்போகிறார்கள். சில விசயங்களில் முரண்படுகிறார்கள். தீர்வை வாசகனுக்கே விட்டுவிடுகிறார்கள்.

பாலியல் தொழில் முறையாக்கப்பட வேண்டும்; வெளிநாடுகள் போன்று செக்ஸ் கிளப்புகள் நம் நாட்டிலும் வேண்டும் என்று இருவருமே சொல்கிறார்கள். அதற்கான காரணங்களை விலாவரியாகப் பேசுகிறார்கள்.

பாலியல் கல்வி வேண்டும் என்று ஜமீலா சொல்கிறார். வேண்டாம் என்று சாரு சொல்கிறார். நம் சமூகம் முதலில் அனைவருக்கும் கல்வியை ஒழுங்காகக் கொடுக்கட்டும்; பின்னர் பாலியல் கல்வி பற்றி பேசலாம். மேலும், பாலியல் கல்வி வேண்டும் என்று சொல்பவர்கள் உயர் வர்கத்தினராகவும், பிராமணர்களாகவுமே இருகிறார்கள். தங்கள் பிள்ளைகள் பள்ளி கல்லூரிகளில் கெட்டுப்போய்விடக் கூடாது என்று பயப்படுகிற ஆட்கள்தான் பாலியல் கல்வி வேண்டும் என்கிறார்கள். அந்த காலத்து 'chastity belt' போல அவர்கள் பாலியல் கல்வியை நினைக்கிறார்கள் என்று சாரு சொல்கிறார்.

இருவரும் பல சுவையான விசயங்களை இப்புத்தகத்தில் கூறுகின்றனர். ஜமீலா கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் போராளி அஜிதா பேசினாராம். கணவன் மனைவியை அடிக்கக்கூடாது என்று அஜிதா பேசியுள்ளார். அப்பொழுது, கூட்டத்தில் அமர்ந்திருந்த அஜிதாவின் மகள் எழுந்து, அம்மாக்கள் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று சொன்னாராம்.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா என ஜமீலா சாருவைக் கேட்கிறார். அதற்கு சாரு சொல்லும் பதில் காவியம். படித்துப் பாருங்கள்.

இணையம் மூலம் வாங்க: http://www.nhm.in/shop/1000000025315.html

பின்குறிப்பு:

இந்நூலின் முதல் பதிப்பு 'பாலியல் - சாரு நிவேதிதா, நளினி ஜமீலா - ஓர் உரையாடல்' என்ற தலைப்பில் ஜனவரி 2008-இல் தென்திசைப் பதிப்பகம் வெளியிட்டது. இரண்டாம் பதிப்பு ஃபெப்ருவரி 2016-இல் உயிர்மை பதிப்பகம் 'இச்சைகளின் இருள்வெளி' என்ற தலைப்பில் வெளியிட்டது.