Monday, February 1, 2016

சிறுதெய்வங்கள்

புகைப்படம் நன்றி: விக்கிமீடியா காம்மன்ஸ்

குருக்குத்துறைக்குப் போய்விட்டுப் போகலாம் சாரு, என்றேன். சரி என்றார். ஒரு கருத்தரங்கிற்காக ஆறு மாதங்கள் முன் நெல்லை சென்றிருந்தோம். தாமிரபரணியைப் பார்த்தவுடனே சாரு சொன்னார், "நான் இந்தக் கோவிலுக்கு ஏற்கனவே வந்திருக்கேனே," என்று. இருபது வருடங்கள் முன் வேலை பிடிக்காமல், ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்ததாகவும் அப்போது அடிக்கடி திருநெல்வேலி வந்ததாகவும் குருக்குத்துறையில் அன்றாடும் நீச்சலடித்ததாகவும் சொன்னார்.

காலை, ரயில் கோவில்பட்டியைத் தாண்டும்போதே," இது தேவதச்சன் ஊர்," என்று சொன்னார். அவர் சிந்தனை முழுவதும் இலக்கியம்தான், எப்பொழுதும்.

லேனா குமார் என்ற ஒரு நண்பர் வீட்டில்தான் நெல்லை வந்தால், தங்கியிருப்பேன். நான் கட்டிலில் படுத்துக்கொள்வேன்; குமார், அவர் மனைவி, குழந்தைகள் பாயில். மாதக்கணக்கில் அவர் வீட்டில் தங்கியிருப்பேன். இலக்கியம், பேச்சு, ஊர் சுற்றல் என்று நாட்கள் ஓடும், என சொல்லிக்கொண்டே போனார். அவர் இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரியவில்லை; அவரை இன்றே பார்த்தாக வேண்டும் என்றார்.

இரண்டு மூன்று நண்பர்கள் மூலம் முயற்சித்து, கடைசியில் மதுரை அருணாச்சலம் மூலம் லேனா குமாரின் தொலைபேசி எண் கிட்டியது. மாலை சந்திப்பதாக ஏற்பாடு.

கருத்தரங்கு முடிந்து, மதியம் திருச்செந்தூர் சென்றோம், திரும்பி வரும் வழியில், ஆழ்வார் திருநகரி போகலாம் சாரு என்றேன். ஆனால், குமாருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; தமிழ் இலக்கியம் இவரைப் போன்ற சிறுதெய்வங்களால்தான் காப்பற்றப்பட்டு வருகிறது என்றார். எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை.

தான் ஏன் கோயிலுக்கு போவதைவிட குமார் போன்றோரிடம் பேசுவதை அதிகம் விரும்புகிறேன் என்பதை சொல்ல ஆரம்பித்தார். மனிதர்கள் அவ்வளவு பாவங்களையும் செய்துவிட்டு, கடவுள்முன் வெக்கமின்றி நிற்பது பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்; அதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலின் சாராம்சம். கதையை கேட்க கேட்க, காரோட்டி அழுதுவிட்டார்.

நானும் கோயிலை ஒரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறேன் சாரு என்று சொல்லிகொண்டிருந்த போது, இயக்குனர் அருண்குமாரிடமிருந்து சாருவுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது; சேதுபதி படத்துக்கு சாருவின் ஆசியைக் கோரியிருந்தார்.

மாலை, லேனா குமாரை அவர் நண்பர்களுடன் சந்தித்தோம். சாருவும் குமாரும் இருபதாண்டு கதைகளைப் பேசிக்கொண்திருந்தனர். ஏதோ, நேற்று மாலைதான் இருவரும் உரையாடிக்கொண்டிருந்ததைப் போலவும், அந்தப் பேச்சை இன்று மாலை தொடர்வது போலவும் இருந்தது.

சாரு அப்பொழுது கல்யாணமாகியும் பிரம்மச்சாரி. மேலதிகாரியின் அழிச்சாட்டியம் தாங்காமல், வேலைக்குப் போய் மாதங்கள் ஆகிவிட்டன. குமாருடன் பேட்டையில் ஒரு ஜோதிடரைப் பார்த்திருக்கிறார். உங்களுக்கு ஆறு மாதத்தில் இன்னொரு திருமணம் நடக்கும்; தபால் நிலைய வேலையில் திரும்பவும் சேர்வீர்கள் என்றாராம் ஜோதிடர். சாருவும் குமாரும் நம்பாமல் சிரித்தார்களாம். (இந்த நிகழ்வின் சுருக்கிய வடிவம் ராஸ லீலாவில் உள்ளது.)

அந்த ஜோதிடரைப் பார்க்கவும் சாரு விரும்பினார். ஆனால், அவர் இறந்துவிட்டாராம்.

வருடந்தவறாமல், குமாரும் நண்பர்களும் திருவனந்தபுரம் திரைப்பட விழாவுக்குச் சென்றுவிடுகின்றனர். தினமும் மாலை, பாளையங்கோட்டையில் ஒரு டீக்கடையில் இலக்கிய விவாதம் உண்டு.

சாரு ஆன்லைன்கூட இவர்கள் வாசிப்பதில்லை. ஆனால், சாருவின் அனைத்து புத்தகங்களையும் வாசித்திருந்தார்கள். தி இந்துவில் எஸ்.ரா.வின் தொடரில் இருந்த ஒரு தகவல்பிழையை காட்டமாக விமர்சித்துக்கொண்டிருந்தார் குமார்.

ஒரு சிறு நகரத்தில், இலக்கியம் படிக்கும் நான்கைந்து நண்பர்களை ஒருங்கிணைத்து, புத்தகங்கள் பற்றி உரையாடி, விமர்சித்து, நண்பர்களுக்கு பரிந்துரைத்து, வாசிப்பை ஊக்கப்படுத்தும் பணியைச் செய்துகொண்டிருப்பவர் குமார். ஒவ்வொரு ஊரிலும் இரண்டு மூன்று லேனா குமார்கள் இருக்கிறார்கள். பெரம்பலூரில் தாரேஸ் அஹமது. ஈரோட்டில்  ஸ்டாலின் குணசேகரன்.

இவரைப் போன்ற சிறுதெய்வங்கள் தங்களை விளம்பரப்படுத்திகொள்வதில்லை. இவர்கள் யாரென்றே இலக்கிய மக்கள்கூட அறிய வாய்ப்பில்லை. முகநூலில் இவர்களுக்கு கணக்கில்லை. ஆனால், தமிழை உயிர்ப்புடன் வைத்திருப்பதிலும் வாசிப்பை பரப்புவதிலும் இவரைப் போன்ற சிறுதெய்வங்களின் பங்கு அலாதியானது.